சினிமா செய்திகள்

தக்லைஃப் விழாவுக்கு பாடகி தீ வராதது ஏன்? – திடுக்கிடும் தகவல்

தக்லைஃப் பட பாடல் வரிசைகளில் இடம்பெற்று படத்தில் இடம்பெறாத பாடல்,முத்த மழை இங்கு கொட்டித் தீராதோ என்ற பாடல்.அந்த தொடக்க வரியை விட, காலை கனவினில் காதல் கொண்டேன் கண் விழித்தேன் அவன் காணவில்லை என்று சொன்னால் எல்லோருக்கும் தெரியுமளவுக்கு அந்தப்பாடல் புகழ் பெற்றிருக்கிறது.

இந்தப்பாடல் புகழ் பெற்ற அளவுக்கு சர்ச்சையையும் சந்தித்தது. அதற்குக் காரணம், இந்தப்பாடலை முதலில் பாடியவர் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் மகள் தீ.

தக் லைஃப் படத்தின் விளம்பர நிகழ்வு சென்னையில் நடந்தபோது மேடையில் அந்தப்பாடலைப் பாட தீ வரவில்லை. அவருக்குப் பதிலாக சின்மயி பாடினார்.

சின்மயியின் குரலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.எதிர்பாராமல் கிடைத்த அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள நினைத்தார் சின்மயி.அதனால் ஒரு விளம்பரக்குழுவை வைத்து தீ பாடியதை விட சின்மயி பாடியதுதான் சிறப்பாக இருக்கிறது என்கிற கருத்தை உருவாக்கியதோடு படத்திலும் சின்மயி பாடியதையே பயன்படுத்த வேண்டும் என்று சொல்ல வைத்தார் என்று திரையுலகில் சொல்லப்பட்டது.

ஆனால், படம் வெளியான போது இந்தப் பாடலின் இரசிகர்களுக்குப் பெருத்த ஏமாற்றம். அந்தப் பாடல் படத்தில் இடம்பெறவே இல்லை.

அதேசமயம், இந்தப் பாடல் குறித்த இவ்வளவு வாதப் பிரதி வாதங்கள் இங்கே நடந்து கொண்டிருக்கின்றன. இப்பாடல் குறித்து சின்மயி நிறையப் பேசிக்கொண்டிருக்கிறார்.ஆனால் முதலில் இதைப்பாடிய தீ, இதுகுறித்து எதுவுமே பேசவில்லை என்பது வியப்பாக இருந்தது.

அதேசமயம், இவ்வளவு பெரிய படத்தில் ஒரு பாடல் பாடிவிட்டு அதன் விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அந்தப்பாடலைப் பாடாமல் விட்டது ஏண்? அதைவிட முக்கியமான நிகழ்ச்சி அவருக்கு இருந்ததா? என்பது குறித்து விசாரித்தால் ஓர் அதிர்ச்சித் தகவல் கிடைத்தது.

அது என்ன?

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் மகள் என்று அறியப்பட்ட தீ, தமிழீழத்தைச் சேர்ந்தவர்.அங்கேயே பிறந்தவரும் கூட.அங்கிருந்து அவ்ருடைய அம்மாவுடன் ஆஸ்திரேலியா சென்று அந்நாட்டின் குடியுரிமை பெற்றிருக்கிறார்.

சந்தோஷ் நாராயணனை அவருடைய அம்மா, மணமுடித்த பிறகும் இந்நிலைதான் தொடருகிறது.

அதனால், தீ சென்னை வரவேண்டுமெனில் இந்திய அரசின் அனுமதி (விசா) இருந்தால்தான் வரமுடியும்.

அதன்படி, தக் லைஃப் விளம்பர நிகழ்வு சென்னையில் நடந்த நேரத்தில் அதில் கலந்து கொண்டு பாட்டுப் பாடுவதற்காக அனுமதி கேட்டிருக்கிறார். ஆனால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டுவிட்டதாம்.

அதற்குக் காரணம், அவர் ஏற்கெனவே வந்து இந்தப்பாடல் பாடியதையே தப்பு என்று சொல்கிறார்களாம்.ஏனெனில் அவர் இந்தியா வருவதற்குக் கொடுக்கப்பட்ட விசா, சுற்றுலா விசா.அதைப் பெற்றவர்கள் இங்கு வந்து சுற்றிப்பார்த்துவிட்டுச் செல்லலாம்.பொது நிகழ்ச்சிகளிலோ வருமானம் தரும் செயல்களிலோ ஈடுபடக்கூடாதாம்.

இவர் சுற்றுலா விசாவில் வாங்கிக் கொண்டு வந்து அதை தன் தொழிலுக்குப் பயன்படுத்திக் கொண்டார் என்பது அவர் மீதான குற்றச்சாட்டு.அதனால் இப்போது அவர் இங்கு வர விசா கேட்டும் கொடுக்க மறுத்துவிட்டார்களாம்.அதனால் சென்னை வரமுடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறாராம் தீ.

இதுதான் அவர் அந்த நிகழ்வில் பாடாமல் போனதற்கான காரணம். அதன் விளைவாகவே சின்மயி அந்தப்பாடலைப் பாடி இவ்வளவு பெரிய சர்ச்சைகள் உருவாகிவிட்டன என்கிறார்கள்.

சில உண்மைநிகழ்வுகள் திரைப்பட திரைக்கதைகளைவிட திடுக்கிடும் திருப்பங்களாக இருக்கும் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு.

Related Posts