September 24, 2026
சினிமா செய்திகள்

ஏ.ஆர்.முருகதாஸ் சிவகார்த்திகேயன் கூட்டணி இருக்கிறதா?

தர்பார் படத்தை அடுத்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய்யின் 65 ஆவது படத்தை இயக்க இருந்தார் ஏ.ஆர்.முருகதாஸ். ஆனால் சன் பிக்சர்ஸ் உடனான கருத்து வேறுபாடு காரணமாக அந்தப் படத்திலிருந்து விலகி விட்டார். இதையடுத்து விஜய்யின் அடுத்த படத்தை ‘டாக்டர்’ பட இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் படத்திலிருந்து விலகிய ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது புதிய முயற்சியில் இறங்கியுள்ளார். சோனி நிறுவனத்துடன் இணைந்து படங்களைத் தயாரிக்கவிருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.

அதோடு அவர் இயக்குவதற்காக, ஒரு குரங்கை முதன்மைப் பாத்திரமாக வைத்துக் கொண்டு சுவாரசியமான திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார் என்று சொல்கிறார்கள்.

அதோடு இதற்கான தொழில்நுட்பப் பணிகளை மேற்கொள்ளும் நிறுவனங்களை அலசி ஆராய்ந்து ஒரு நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்து வேலைகளையும் தொடங்கிவிட்டதாகச் சொல்லப்படுகிறது.

இதற்கிடையே, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் விருப்பம் தெரிவித்ததாகச் சொல்லப்படுகிறது. நடிகர் சிவகார்த்திகேயனை சந்தித்த ஏ.ஆர்.முருகதாஸ் ஒரு கதையைச் சொன்னதாகவும் அந்தக் கதை சிவகார்த்திகேயனுக்கு பிடித்துப் போனதாகவும் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனம் அந்தப் படத்தை தயாரிக்க இருப்பதாகவும் செய்திகள் வந்தன.

இது உண்மையா? என்று விசாரித்த போது….

இன்றைக்கு சிவகார்த்திகேயன் முப்பது கோடி சம்பளம் வாங்கும் இடத்தில் இருக்கிறார். ஏ.ஆர்.முருகதாஸ் கடைசியாக இயக்கிய தர்பார் படத்துக்கு வாங்கிய சம்பளம் முப்பத்தியிரண்டு கோடி.

இருவரும் இணைவதற்காக ஆளுக்குக் கொஞ்சம் விட்டுக்கொடுத்தாலும் இவர்களுக்கு இவ்வளவு சம்பளம் கொடுத்த பிறகு மற்ற நடிகர்கள் நடிகைகள் ச்மப்ளம் தொழில்நுட்பக் கலைஞர்கள் சம்பளம் ஆகியனவற்றோடு படமெடுக்க ஆகும் செலவு ஆகியனவற்றைக் கணக்குப் போட்டால் வரும் தொகை பெரிது என்றும் தற்போதைய சூழலில் அந்த அளவுக்கு வியாபாரம் இருக்குமா? என்பதில் சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது.

2021 பிறந்த பின் திரையரங்குகள் முழுமையாகத் திறக்கப்பட்டு மக்கள் முழுமையாக வருவார்கள் என்கிற நம்பிக்கை வந்தால் இப்படி ஒரு படம் நடக்கும் இல்லையென்றால் இல்லை என்கிறார்கள்.

Related Posts