சினிமா செய்திகள்

உலகெங்கும் சுமார் 1000 திரையரங்குகள் – மிகுந்த எதிர்பார்ப்பில் கருடன்

சூரி கதாநாயகனாக நடித்து வெளியாகவிருக்கும் இரண்டாவது படம் கருடன்.இப்படத்துக்கு இயக்குநர் வெற்றிமாறன் கதை எழுதியிருக்கிறார்.இயக்குநர் ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் இயக்கியுள்ளார்.

இப்படத்தில் சூரியுடன் சசிகுமார், உன்னி முகுந்தன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.‌ இவர்களுடன் சமுத்திரக்கனி, ரேவதி சர்மா, ஷிவதா நாயர், மைம் கோபி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

ஆர்தர் ஏ. வில்சன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். பிரதீப் ஈ.ராகவ் படத்தொகுப்புப் பணிகளைக் கையாள, ஜி.துரைராஜ் கலை இயக்கப் பொறுப்பை ஏற்றிருக்கிறார்.‌இந்தத் திரைப்படத்தை லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே.குமார் தயாரித்திருக்கிறார்.

இப்படம் நாளை மறுநாள் உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

கதாநாயகனாக நடித்த முதல்படம் விடுதலை.அதில் வெற்றிமாறன், விஜய்சேதுபதி சிறப்புத்தோற்றம், இளையராஜா இசை எனப் பல சாதகமான அம்சங்கள் இருந்தன.அந்தப்படமும் பெரிய வெற்றி பெற்றது.

அதேபோல் இந்தப்படத்திலும் வெற்றிமாறன் கதை, தமிழ்நாட்டில் புகழ்பெற்ற சசிகுமார், மலையாளத்தில் புகழ்பெற்ற உன்னிமுகுந்தன் ஆகியோர் நடித்திருப்பதோடு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.

விடுதலை அளவுக்கு இதிலும் சாதகமான அம்சங்கள் நிரம்பியிருப்பதால் இந்தப்படத்துக்கும் இரசிகர்களிடத்தில் பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருக்கிறது.

நாளை மறுநாள் வெளியாகவிருக்கும் பெரிய படம் இது மட்டுமே என்பதால் திரையரங்குக்காரர்கள் இந்தப் படத்தைத் திரையிட அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகிறார்களாம்.

தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 550 திரையரங்குகள் கேரளா,ஆந்திரா,கர்நாடகா மற்றும் வெளிநாடுகளைச் சேர்த்தால் சுமார் 950 முதல் 1000 திரையரங்குகளில் இப்படம் திரையிடப்படவுள்ளது என்கிறார்கள்.

இன்னொரு பக்கம் இப்படம் வெளியீட்டை ஒட்டி பல காணொலிப் பேட்டிகள் கொடுத்திருக்கிறார் சூரி.அவை ஒவ்வொன்றும் பல இலட்சம் பார்வையாளர்களைப் பெற்று முதலிடத்தில் இருந்து கொண்டிருக்கின்றனவாம்.

இது இரசிகர்கள் மத்தியில் இந்தப்படத்துக்கு அதிகம் எதிர்பார்ப்பு இருக்கிறது என்பதற்கான சான்று எனச் சொல்லி மகிழ்கிறது படக்குழு.

Related Posts