சினிமா செய்திகள்

ஈஸ்வரன் படத்துக்கு அடுத்தடுத்த சிக்கல்

சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு, பாரதிராஜா, நிதி அகர்வால், பாலசரவணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஈஸ்வரன்’. ஒளிப்பதிவாளராக திரு, இசையமைப்பாளராக தமன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். மாதவ் மீடியா நிறுவனம் தயாரித்துள்ளது.

இப்படம், பொங்கல் திருநாளையொட்டி சனவரி 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனிடையே திரையரங்குகளில் வெளியாகும் அதே நாளில், வெளிநாட்டுவாழ் மக்களுக்காக OLYFLIX என்ற ஓடிடி தளத்திலும் ‘ஈஸ்வரன்’ வெளியாகும் எனப் படக்குழு அறிவித்தது.

ஆனால், ஓடிடியில் வெளியிடுவதால் திரையரங்குகளில் வெளியிட முடியாது என்று திரையரங்க உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து தங்களுடைய முடிவை மாற்றியது படக்குழு. திரையரங்குகளில் வெளியாகும் அன்று எந்தவொரு ஓடிடி தளத்திலும் வெளியாகாது என்று தெரிவித்தது.

தற்போது தங்களுடைய முடிவைத் திரையரங்க உரிமையாளர்களுக்குக் கடிதமாக எழுதியுள்ளார் ‘ஈஸ்வரன்’ தயாரிப்பாளர் பாலாஜி கப்பா.

அதில் அவர் கூறியிருப்பதாவது…..

வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் மற்றும் தமிழ்ப் பட ஆர்வலர்கள் கண்டு இரசிப்பதற்காக, அந்த நாடுகளில் ‘ஈஸ்வரன்’ படத்தைத் திரையரங்குகளில் வெளியிட முடியாத சூழல் நிலவுவதால் எங்களுடைய படங்களைப் பணம் கொடுத்துப் பார்க்கும் வசதியைக் கொண்ட OLYFLIX-ல் வெளியிடலாம் எனத் திட்டமிட்டிருந்தோம். ஆனால், தற்போது எங்கள் முடிவில் மாற்றம் செய்து, மூன்று அல்லது நான்கு வாரத்திற்குப் பிறகே இதுபோன்ற தளங்கள் வாயிலாக வெளிநாடுகளில் வெளியிடுவது என முடிவு எடுத்திருக்கிறோம்.

எனவே ‘ஈஸ்வரன்’ படம் வெளியாகும் அன்றோ அல்லது அதன் பிறகு மூன்று வாரங்களுக்கு உள்ளோ எந்த விதமான ஓடிடி தளங்களிலும் வெளியாகாது என்று உறுதி கூறுகிறோம். எனவே, திரையரங்க உரிமையாளர்கள் இந்தப் படத்திற்கு நல்ல ஒத்துழைப்பினை நல்கி எங்கள் படம் வெற்றி அடைய உறுதுணை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு பாலாஜி கப்பா தெரிவித்துள்ளார்.

இதன்பின், திரையரங்குகளில் ஈஸ்வரன் படத்தைத் திரையிடலாம் என்று திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் சொல்லிவிட்டது.

இன்னொருபக்கம், திரையரங்குகளுக்குப் படத்தைக் கொடுக்கும் க்யூப் நிறுவனத்துக்கு தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் ஒரு கடிதம் எழுதியுள்ளது.

அதில்…

ஈஸ்வரன் படத்தின் வெளீயீடு தொடர்பான பணிகளை எங்களது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் ஒப்புதல் பெற்ற பின்பு மேற்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம் என்று கூறியுள்ளனர்.

ஆர்.ராதாகிருஷ்ணன் மற்றும் மன்னன் ஆகிய இரண்டு செயலாளர்களும் கையெழுத்திட்ட அந்தக் கடிதத்தால் படம் வெளியாகுமா? என்கிற நிலை ஏற்பட்டது. அச்சிக்கலும் சுமுகமாகத் தீர்க்கப்பட்டுவிட்டதாகச் சொல்லப்படுகிறது.

அடுத்தடுத்து வந்த சிக்கல்களைத் தாண்டி ஈஸ்வரன் கண்டிப்பாக வெளியாகும் என்று சொல்கின்றனர்.

Related Posts