பிரபாஸ் கமல் அமிதாப் நடிக்கும் கல்கி – வித்தியாச விளம்பரம்

தெலுங்குத் திரையுலகின் முன்னணி நாயகர்களில் ஒருவரான பிரபாஸின் அடுத்த படம் ‘கல்கி 2898 AD’.அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன், மற்றும் திஷா பதானி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்தப் படம்,
பிரபல இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் சயின்ஸ் பிக்சன் படமாக உருவாகியுள்ளது.
தெலுங்குத் திரையுலகின் முக்கிய திரைப்பட நிறுவனங்களில் ஒன்றான வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் இப்படத்தைப் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது
ஒரு பன்மொழிப் படைப்பாக, புராணக்கதைகளால் ஈர்க்கப்பட்ட, எதிர்காலத்தில் நடக்கும் அறிவியல் புனைகதை வகையில் இப்படம் உருவாகியுள்ளது
இந்தியத் திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் ‘கல்கி 2898 கி.பி’ படம், ஜூன் 27, 2024 அன்று திரைக்கு வருகிறது. படம் திரைக்கு வருவதையொட்டி படக்குழுவினர்,படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளைத் தொடங்கியுள்ளனர்.
மே 22, 2024 அன்று, ஐதராபாத்தில் நடந்த விழாவில், படத்திற்காக மகேந்திரா நிறுவனம் மூலம் பிரத்தியேகமாக உருவாக்கிய, படத்தில் பயன்படுத்தப்படும் எதிர்கால வாகனமான ‘புஜ்ஜி’யை அறிமுகப்படுத்தினர். பைரவா என்ற பிரபாஸின் சிறந்த நண்பனாக படம் முழுதும் அவருடன் ஒரு எதிர்கால வாகனம் வருகிறது. இந்த அற்புதமான படைப்பான, ‘புஜ்ஜி’ யை நடிகர் பிரபாஸ் அதனை இரசிகர்கள் முன்னிலையில் அறிமுகப்படுத்தினார்.

Bujji
அதனைத் தொடர்ந்து, தற்போது அந்த வாகனம் சென்னை மகேந்திரா சிட்டிக்கு கொண்டு வரப்பட்டு, பொதுமக்கள் முன்னிலையில் பார்வைக்கு வைக்கப்பட்டது.
பைரவாவாக வரும் பிரபாஸும், புஜ்ஜியும் படத்தில் மிக முக்கிய பாத்திரத்தைப் வகிக்கிறார்கள். புஜ்ஜி டீசர் வைரலாகி, வரவேற்பைப் பெற்ற நிலையில் இவ்வாகனத்தைக் காண மக்கள் அலையெனத் திரண்டனர்.
கற்பனையிலும் நினைத்துப் பார்த்திராத வடிவத்தில், மூன்று சக்கரங்களுடன், நவீன வசதிகளுடன், பார்த்தவுடன் எதிர்காலத்தைக் கண்முன் கொண்டு வரும் வகையிலான புஜ்ஜி வாகனம், பார்த்தவர்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
ஆயிரக்கணக்கில் கூடி இவ்வாகனத்தைப் பார்வையிட்ட மக்கள், பட டீசரில் நடிகர் பிரபாஸ் அமர்ந்து பயணித்த இடத்தில் அமர்ந்து, ஆவலுடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர்.