விமர்சனம்

சீமராஜா – திரைப்பட விமர்சனம்

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் ஆகிய படங்களில் பொறுப்பற்ற இளைஞராக ஊரைச் சுற்றிக்கொண்டிருக்கும் வேடத்தை சிவகார்த்திகேயனுக்குக் கொடுத்த இயக்குநர் பொன்ராம், இந்தப்படத்தில் அவரை ராஜாவாக்கியிருக்கிறார்.

இரட்டைக்குதிரை பூட்டிய சாரட் வண்டியில் வலம்வந்து, கும்பிடு போடுகிறவர்களுக்கெல்லாம் பணம் கொடுக்கும் வள்ளலாக இருக்கிறார் சிவகார்த்திகேயன். அவருடைய கணக்குப்பிள்ளையாக சூரி.

இருவரும் வழக்கம் போல கேலி கிண்டல் சீண்டல் என எல்லாவற்றையும் செய்கிறார்கள். பல இடங்களில் சிரிப்பு சில இடங்களில் கடுப்புக்கிடையே, இது சக்ஸஸ் காம்பினேஷன் அதை சட்டுனு பிரிக்கமுடியாது என்று சூரியே சொல்லிவிடுகிறார்.

ராஜாவாக இருந்தாலும் ராணி வேண்டுமென்றால் அவர் பின்னால் சுற்றியாக வேண்டும். பள்ளிக்கூடத்தில் உடற்பயிற்சி ஆசிரியராக வேலை செய்யும் சமந்தா பின்னால் சுற்றுகிறார் சிவகார்த்திகேயன்.

அந்தக்காதலுக்குச் சோதனைகள், அதே நேரம் தங்கள் சமஸ்தானத்தில் வாழும் மக்களுக்கு ஏற்படும் சோதனைகளிலிருந்து அவர்களைக் காப்பாற்ற வேண்டிய கடமை ஆகியனவற்றை சீமராஜா எப்படி எதிர்கொள்கிறார் என்பதுதான் படம்.

முந்தைய படங்களைக் காட்டிலும் நன்றாக மெருகேறியிருக்கிறார் சிவகார்த்திகேயன். வழக்கமான ஆட்டம், பாட்டங்களுடன், 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மன்னர் கடம்பவேல்ராஜாவாக அவர் வருகிற காட்சிகளில் முற்றிலும் புதிய பரிமாணத்தைக் காட்டியிருக்கிறார். மக்களைக் கேடயமாகப் பயன்படுத்துகிறவன் தலைவன் அல்ல, மக்களுக்குக் கேடயமாக இருக்கிறவனே தலைவன் என்று சீறும் சிவகார்த்திகேயன் கடல் கடந்த தமிழ் வீரத்தை நினைவு படுத்துகிறார்.

சமந்தா அழகு என்று புதிதாகச் சொல்லவேண்டியதில்லை, இப்படத்தில் இலாவகமாகக் கம்பு சுற்றி அதிரடியும் காட்டியிருக்கிறார்.

நெப்போலியன், சிம்ரன், லால் ஆகியோரும் கொடுத்த வேடங்களைச் செய்திருக்கிறார்கள். சிம்ரனின் உடல்மொழியும் குரல்மொழியும் ஒட்டாமல் நிற்கிறது.

இமானின் இசையில் யுகபாரதியின் வரிகளில் பாடல்கள் நன்று.பின்னணி இசையும் தேவையான அளவு இருக்கிறது.

பாலசுப்பிரமணியத்தின் ஒளிப்பதிவு படத்தை வண்ணமயமாக்குகிறது.

கலைஇயக்குநர் முத்துராஜூக்குக் கொலக்குத்து. புகுந்து விளையாடியிருக்கிறார்.

யோகிபாபுவை கூட்டத்தோடு கூட்டமாக நிற்க வைக்கிற அளவுக்குப் படத்தில் நிறைய நடிகர்கள். ஒவ்வொரு காட்சியிலும் பெருங் கூட்டம் என மிக மிகத் தாராளமாகச் செலவு செய்திருக்கிறார்கள்.

காற்றாலையை ஒரு பீடித்துண்டில் எரியவிடுவதில் நிலமிழந்த விவசாயிகளின் கோபம் தெரிகிறது.

நாற்பது வயசாகியும் இன்னும் கல்யாணம் ஆகல, ஏன்னா விவசாயிக்கு யாரும் பொண்ணு கொடுக்க மாட்டேங்கிறாங்க என்று கலங்கி அழும் விவசாயியை வைத்து விவசாயிகளின் இன்றைய நிலையை விளக்கியிருக்கிறார்கள்.

ஒரு பெண்ணைத் துரத்தித் துரத்திக் காதலித்து அந்தக்காதலில் வெற்றி பெறுவதற்கான போராட்டத்தோடு ஒரு சமுதாயச் சிக்கலையும் சேர்த்திருக்கிறார் இயக்குநர் பொன்ராம்.

திரைக்கதையில் தெளிவும் கூர்மையும் இருந்திருக்கவேண்டும்.நான் அரைச்ச மாவையே அரைக்கிறேன் என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துவிட்டால் மக்கள் மன்னிப்பார்கள் என்று நினைத்திருக்கிறார் பொன்ராம்.

சீமராஜாவின் பலம் சிவகார்த்திகேயன்.

Related Posts