ஜென்ம நட்சத்திரம் – திரைப்பட விமர்சனம்
கடவுள் நம்பிக்கைக்கு எதிராக சாத்தான் நம்பிக்கை எனும் எதிர்மறை நிகழ்வுகளும் நாட்டில் நடக்கின்றன.அதை மையமாகக் கொண்டு வெளியாகியிருக்கும் திகில் படம் ஜென்ம நட்சத்திரம்.
பாழடைந்த தொழிற்சாலை ஒன்றில் கோடிக்கணக்கான பணம் பதுக்கி வைக்கப்படுகிறது.வைத்தவர் காளிவெங்கட்.அவர்,பணம் இருக்கும் தகவலை நாயகனிடம் சொல்லிவிட்டு இறந்து போகிறார்.அந்தப் பணத்தை எடுப்பதற்காக நாயகன் தமன்,அவர் மனைவி மால்வி மல்ஹோத்ரா மற்றும் சில நண்பர்கள் செல்கிறார்கள்.போகிற இடத்தில் பல பயங்கரங்கள் நடக்கின்றன.அவை என்னென்ன? அவற்றின் முடிவென்ன? என்பதைச் சொல்வதுதான் படம்.
நாயகனாக நடித்திருக்கும் தமன், மர்ம நிகழ்வுகள் பயங்கர உருவங்கள் ஆகியனவற்றைக் கண்டு பயப்படாமல் துணிவுடன் நிதானமாக எதிர்கொள்ளும் வேடமேற்று அதற்குத் தக்க நடித்து வரவேற்புப் பெறுகிறார்.
தமன் மனைவியாக நடித்திருக்கும் மால்வி மல்ஹோத்ராவுக்கு எப்போதும் பயந்து நடுங்கும் வேடம்.அதற்கேற்ப அவருக்கு நிறைய கொடுங்கனவுகள் வருகிற வேடம் கொடுத்திருக்கிறார்கள்.அவரும் நன்றாகப் பயந்து நம்மையும் பயப்பட வைக்கிறார்.
தமனின் நண்பர்களாக நடித்திருக்கும் மைத்ரேயா, சிவம், அருண் கார்த்தி ஆகியோர் மற்றும் மைத்ரேயாவின் காதலியாக நடித்திருக்கும் ரக்ஷா ஷெரின் ஆகியோர் நடிப்பும் பொருத்தம்.
காளி வெங்கட், வேல ராமமூர்த்தி, முனீஷ்காந்த், தலைவாசல் விஜய், சந்தான பாரதி, நக்கலைட்ஸ் நிவேதிதா, யாசர் ஆகியோரும் அவரவர் வேடத்தை நன்றாகச் செய்திருக்கிறார்கள்.
படம் பார்க்கவருவோரை பயப்பட வைப்பதே நோக்கம்.அதைத் தன் பங்குக்கு காட்சிகளில் காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் கே.ஜி.
இதுபோன்ற படங்களுக்கு இசையமைப்பாளரின் பங்கு மிக முக்கியம் என்பதை உணர்ந்து பணியாற்றி தன் பங்குக்கு பயத்தைக் காட்டியிருக்கிறார் இசையமைப்பாளர் சஞ்சய் மாணிக்கம்.
கடவுள் நம்பிக்கை சார்ந்து நிறையப் படங்கள் வருகின்றன,அதற்கு நேரெதிரான சாத்தான் நம்பிக்கை அதன் மூலம் நடக்கும் நிகழ்வுகள் ஆகியனவற்றை மையமாகக் கொண்டு ஒரு திகில் படத்தைக் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்து இப்படத்தை எடுத்திருக்கிறார் இயக்குநர் பி.மணிவர்மன்.அவர் நினைத்ததில் பாதி நடந்திருக்கிறது.
– இளையவன்











