துபாயில் அயலான் டிரெய்லர் வெளியீடு – விவரங்கள்
சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் படம் பொங்கல் திருநாளையொட்டி சனவர் 12,2024 அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இன்று நேற்று நாளை புகழ் ஆர்.ரவிக்குமார் இயக்கியுள்ள இந்தப்படத்தில்,நாயகியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்திருக்கிறார். இவர்களுடன், ஷரத் கேல்கர், இஷா கோபிகர், பானுப்ரியா, யோகி பாபு, கருணாகரன், பால சரவணன் ஆகியோர் உட்பட பலர் இதில் நடித்துள்ளனர். இந்தப்படத்துக்கு நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார்.
இப்படத்தின் டீசர், படத்தில் இடம்பெறும் இரண்டு பாடல்கள் ஆகியன வெளியாகி வரவேற்பைப் பெற்றிருக்கின்றன.
இந்நிலையில், இந்தப்படத்தின் இசைவெளியீட்டுவிழா டிசம்பர் 26 அன்று சென்னையிலுள்ள நட்சத்திர விடுதியொன்றில் நடக்கவிருக்கிறது.ஏ.ஆர்.ரகுமானுக்குச் சிறப்புச் செய்யும்விதமாக இந்நிகழ்வை நடத்தவிருக்கிறார்கள். ஏ.ஆர்.ரகுமானும் கலந்துகொண்டு படக்குழுவின் சிறப்பை ஏற்கிறார்.
இந்தவிழாவுக்கான வேலைகள் வேகமாக நடந்து கொண்டிருக்கின்றன.அதேநேரம்,இசைவெளியீட்டுவிழாவைத் தொடர்ந்து இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டுவிழாவை நடத்தத் திட்டமிட்டு அதற்கான வேலைகளும் தொடங்கியிருக்கின்றனவாம்.
டிரெய்லர் வெளியீட்டு நிகழ்வு துபாயில் நடத்தவிருக்கிறார்கள். 2024 சனவரி 7 அன்று நடக்கவிருக்கிறதாம்.அதற்காக சிவகார்த்திகேயன், இயக்குநர் ஆர்.ரவிக்குமார் தயாரிப்பாளர் கே.ஜே.ஆர் உள்ளிட்ட படக்குழுவினர் துபாய் செல்லவிருக்கிறார்கள்.
இப்படத்தின் வெளிநாட்டு விநியோக உரிமையைப் பெற்றிருக்கும் நிறுவனம் இதற்கான வேலைகளைச் செய்துகொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
ஏற்கெனவே சிலமுறை இப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டு தள்ளிப்போனது. அதன் காரணமாக வருகிற பொங்கலன்றும் இந்தப்படம் வெளியாவது குறித்த ஐயங்கள் அங்கங்கே எழுப்பப்பட்டு வருகின்றன.
ஆனால், அதற்கு நேரடியாகப் பதில் சொல்லாமல் தங்கள் செயல் மூலம் பதிலளித்துக் கொண்டிருக்கிறது படக்குழு.
டிசம்பர் 26 அன்று இசைவெளியீட்டுவிழா நடந்து பத்தே நாட்களில் டிரெய்லர் வெளியீட்டுவிழாவையும் நடத்தவிருக்கிறார்கள் என்பது உள்ளிட்டவை படவெளியீட்டை நூறுவிழுக்காடு உறுதி செய்திருக்கிறது.
இதனால்,அயலான் படக்குழுவினர் மட்டுமின்றி சிவகார்த்திகேயன் இரசிகர்களும் கொண்டாட்டத்துக்குத் தயாராகிவருகின்றனர்.












