சினிமா செய்திகள்

லால்சலாம் பின்வாங்கியது மிஷன்சாப்டர்1 வருகிறது – ஏன்?

2024 பொங்கல் திருநாளையொட்டி சிவகார்த்திகேயனின் அயலான், ரஜினிகாந்த் கவுரவவேடத்தில் நடித்திருக்கும் லால்சலாம்,தனுஷின் கேப்டன்மில்லர் மற்றும் சுந்தர்சியின் அரண்மனை 4 ஆகிய படங்களுடன் விஜய்சேதுபதி கத்ரினாகைஃப் ஆகியோர் நடித்த இந்திப்படமான மேரிகிறிஸ்துமஸ் படத்தின் தமிழாக்கமும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஐந்து பெரியநடிகர்களின் படங்கள் ஒரேநாளில் வெளியாவது பற்றி வியாபாரக் கண்ணோட்டத்திலான எதிர்மறைக்கருத்துகள் பேசப்பட்டுவந்தன.

இந்நிலையில் இப்போது ரஜினிகாந்த்தின் லால்சலாம் மற்றும் சுந்தர்சியின் அரண்மனை 4 ஆகிய படங்கள் பொங்கல் வெளியீட்டிலிருந்து பின்வாங்கிவிட்டன.

இவற்றில் அரண்மனை 4 படம் எந்த அறிவிப்பும் இல்லாமல் பின்வாங்கியது. லால்சலாம் படம் பின்வாங்கியதை நேரடியாகச் சொல்லாமல் மறைமுகமாக அறிவித்திருக்கிறார்கள்.

லால்சலாம் படத்தைத் தயாரித்திருக்கும் லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அருண்விஜய் கதாநாயகனாக நடித்துள்ள மிஷன்சாப்டர் 1 படத்தை 2024 பொங்கல்நாளில் வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறோம் என்று அறிவித்திருந்தது.

இதன்மூலம் லால்சலாம் வெளியாகாது என்பதை அந்நிறுவனமே அதிகாரப்பூர்வமாகச் சொல்லிவிட்டது என்று சொல்லப்படுகிறது.

லால்சலாம் பின்வாங்கக் காரணம் என்ன?

லால்சலாம் படத்தில் ரஜினிகாந்த் நடித்த காட்சிகள் பதிவாகாமல் போயின என்பதால் அக்காட்சிகளைத் திரும்ப எடுக்கவேண்டும் என்பதால் அப்படம் தாமதமாகிறது என்று வெளிப்படையாகச் சொல்லப்படுகிறது.

இன்னொருபக்கம், முழுமையாகத் தொகுக்கப்பட்ட படத்தை ரஜினி பார்த்திருக்கிறார். அவருக்குப் படம் சுத்தமாகப் பிடிக்கவில்லையாம்.அதனால் கடுப்பான அவர் படத்தில் பல திருத்தங்களைச் செய்ய அறிவுறுத்தினாராம்.அதை ஏற்று அதற்கான வேலைகளில் படக்குழுவினர் ஈடுபட்டுவருகிறார்களாம்.இதையும் வேகமாகச் செய்து முடித்து பொங்கலில் படத்தை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் நினைத்தபடி பணிகள் நிறைவடையாது என்பதால் தள்ளிப்போய்விட்டார்கள் என்று சொல்லப்படுகிறது.

அதன்பின், ஏற்கெனவே வாங்கி வைத்திருந்த மிஷன்சாப்டர் 1 படத்தை வெளியிட லைகா நிறுவனம் முடிவு செய்திருக்கிறது.

லால்சலாம் வெளியாகவில்லையென்றால் அமைதியாக இருக்கவேண்டியதுதானே? ஏன் வேறொரு படத்தை வலுக்கட்டாயமாக வெளியிடவேண்டும்? என்று கேட்டால்,

லால்சலாம் படத்தை தமிழ்நாடு திரையரங்குகளில் வெளியிடும் உரிமை ரெட்ஜெயண்ட் நிறுவனத்துக்குக் கொடுக்கப்பட்டிருந்தது.

அந்நிறுவனம் தொடர்ச்சியாகப் படங்களை வெளியிட்டு வருவதால் தமிழ்நாடு முழுக்க ஏராளமான திரையரங்குகள் அந்நிறுவனத்தின் படங்களை வெளியிட முன்னுரிமை கொடுத்துவருகின்றன.அவர்களுக்கு புதியபடம் ஒன்றைக் கொடுத்தாக வேண்டும் என்பது ரெட்ஜெயண்ட்டின் நிலை. அதனால் அந்நிறுவனத்தின் வலியுறுத்தலின் பேரிலேயே மிஷன்சாப்டர்1 படத்தை வெளியிட லைகா நிறுவனம் முடிவெடுத்ததாகச் சொல்கிறார்கள்.

Related Posts