விஜய் சிவகார்த்திகேயன் பேசினால் தப்பில்லையா? – சந்தானம் கேள்வி
சந்தானம் நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் படம் இங்க நான்தான் கிங்கு. ஆனந்த் நாராயண் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில்
பிரியாலயா கதாநாயகியாக அறிமுகமாகிறார்.
இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை எழிச்சூர் அரவிந்தன் எழுதியுள்ளார்.இமான் இசையமைத்துள்ளார் பாடல்களை இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் முத்தமிழ் எழுதியுள்ளனர்.
இப்படத்துக்கு ஒளிப்பதிவு – ஓம் நாராயண்,படத்தோகுப்பு – எம்.தியாகராஜன்,
கலை – எம்.சக்தி வெங்கட்ராஜ்,சண்டைப் பயிற்சி – மிராக்கிள் மைக்கேல், நடன இயக்கம் கல்யாண் – பாபா பாஸ்கர்
மே 17 ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் இப்படத்தை விளம்பரப்படுத்துவதற்காக ஒரு நிமிடம் இரண்டு நிமிடங்கள் ஓடும் சில காணொலிகளை வெளியிட்டிருக்கிறார்கள்.
அவற்றிலொன்று கடும் எதிர்ப்புக்கு ஆளாகியிருக்கிறது.
அதில், நடிகர் தம்பிராமையாவைப் பார்த்து சந்தானம் மிகவும் கேவலமான கெட்ட வார்த்தையொன்றைப் பேசுகிறார்.
அதைப் பார்த்த அனைவரும் திடுக்கிட்டுப் போனார்கள்.நூறு நூற்றைம்பது பேர் இருக்கும் படப்பிடிப்புத் தளத்தில் இப்படி ஒரு வசனத்தைச் சொல்லிக் கொடுத்து அதை சந்தானமும் பேசி படமாக்கியது எப்படி? இவர்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா? என்று ஏகத்துக்கும் எதிர்ப்புகள்.
ஆனால், சந்தானம் தரப்பினரோ வேறுமாதிரி சொல்கிறார்கள்.பெரிய சந்தை மதிப்புள்ள விஜய், சிவகார்த்திகேயன் போன்றோரே இப்படிச் செய்யும்போது சந்தானம் செய்வது மட்டும் தப்பாகத் தெரிகிறதா? என்று கேட்கிறார்கள்.
லியோ படத்தின் முன்னோட்டத்தில் விஜய் கெட்ட வார்த்தை பேசியிருந்தார். அமரன் படத்தில் இராணுவ அதிகாரியாக நடிக்கும் சிவகார்த்திகேயன் கெட்ட வார்த்தை பேசியிருந்தார்.
அவற்றைக் குறிப்பிட்டுத்தான் சந்தானம் தரப்பினர் இப்படிச் சொல்கிறார்கள்.
அண்மைக்காலமாக திரையரங்குகளில் எந்தப்படமும் ஓடுவதில்லை, ஒரு படத்தை மக்கள் கவனிக்க வேண்டும் என்பதற்காக மிக அதிகம் உழைக்க வேண்டியுள்ளது. அவற்றில் ஒன்றுதான் இது என்கிறார்கள்.
மற்ற விளம்பரத் துண்டுப்படங்களைக் காட்டிலும் இதற்கு அதிக விருப்பக்குறிகள் உள்ளன என்றும் சொல்கிறார்கள்.
இன்னொரு குறிப்பிடத்தக்க விசயம் என்னவென்றால் தணிக்கையில் அந்த வசனத்தை வெட்டிவிட்டார்களாம்.
அதனால் படத்தில் அது இடம்பெறாது என்றாலும் படத்தின் விளம்பரத்துக்காக சமூகவலைதளங்களில் இதை வெளியிட்டுள்ளனர்.