தலைநகரம் 2 – திரைப்பட விமர்சனம்
சென்னையின் முன்னாள் ரவுடி சுந்தர்.சி திருந்தி, நண்பர் தம்பிராமையாவுடன் இணைந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்துவருகிறார்.
இந்நிலையில், வடசென்னையை ஜெய்ஸ் ஜோஸ், மத்திய சென்னையை விஷால் ராஜன், தென் சென்னையை பிரபாகர் ஆகியோர் தம் வசம் வைத்திருக்கிறார்கள். இவர்களுக்குள் மொத்த சென்னையின் அதிகாரத்தைக் கைப்பற்றும் போட்டி.
மத்திய சென்னை விஷால்ராஜனுக்கும் தென்சென்னை பிரபாகருக்கும் இடையிலான சிக்கலில் மாட்டுகிறார் தம்பிராமையா. அவரைக் காக்க மீண்டும் களமிறங்குகிறார் சுந்தர்.சி. அதன்பின் என்னவெல்லாம் நடக்கிறது என்பதுதான் படம்.
2006 ஆம் ஆண்டிலேயே தாதா வேடத்துக்குப் பொருந்தியிருந்தார் சுந்தர்.சி. இப்போது இன்னும் கூடுதல் உடம்புடன் அதற்கு முழுப்பொருத்தமாக இருக்கிறார். சண்டைக்காட்சிகளில் கஷ்டப்பட்டிருக்கிறார்.
நாயகி பாலக்லால்வானி நடிகையாகவே நடித்திருக்கிறார். அதனால் மிக இயல்பாக நடித்து இளைஞர்களைக் கவர்கிறார்.
தம்பிராமையாவுக்கு பெரியவேடம். அவர் அதை மிக அநாயசமாகச் செய்து வரவேற்புப் பெறுகிறார்.அவர் மகளாக நடித்திருக்கும் ஆயிரா வும் கவனம் ஈர்க்கிறார்.
வில்லன்கள் ஜெய்ஸ் ஜோஸ், விஷால்ராஜன், பிரபாகர் ஆகியோர் கதையில் மட்டுமின்றி நடிப்பிலும் போட்டி போட்டிருக்கிறார்கள்.
ஜிப்ரானின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் அளவாக அமைந்திருக்கிறது.
இ.கிருஷ்ணசாமியின் ஓளிப்பதிவில் சண்டைக்காட்சிகள் பயப்பட வைக்கின்றன.
தலைநகரம் படத்தை சுராஜ் இயக்கியிருந்தார். தலைநகரம் 2 படத்தின் திரைக்கதையை முதல்பாகத்தின் தொடர்ச்சியாகவே வடிவமைத்திருக்கிறார் இயக்குநர் வி.இசட்.துரை.இவர் பன்முகத்தன்மையுள்ள படத்தைக் கொடுக்கக் கூடியவர், இந்தப்படத்தில் வன்முறை மற்றும் கொலைக்காட்சிகளுக்குக் கூடுதல் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்.
சண்டைப் பிரியர்களுக்கான படம்.
– ஆனந்தன்