September 20, 2026
விமர்சனம்

நாயாடி – திரைப்பட விமர்சனம்

ராகவாலாரன்ஸ் டாப்சி உட்பட பலர் நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளியான படம் காஞ்சனா 2. அந்தப்படத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சியின் உயர்வுக்காக ஒரு நிகழ்ச்சியைத் தயாரிக்க ஒரு வீட்டுக்குச் சென்று படப்பிடிப்பு நடத்துவார்கள். பொய்யாகப் பேய்க்கதையை எடுக்க நினைத்து அங்கு போனால் நிஜமாகவே அங்கு பேய் இருக்கும். அதனால் பல சிக்கல்கள். அந்தப் பேய்க்கு ஒரு முன் கதை இருக்கும்.

நாயாடி படமும் இதேகதையைக் கொண்டதுதான்.கேரளாவில் இடம் ஒன்றை வாங்கியுள்ள ஆசாமி அங்கு நாயாடி மக்களின் அமானுஷ்யம் இருப்பதாகக் கூறுகிறார். இதுதொடர்பாக மக்களை நம்ப வைக்கும் வகையில் சில காணொலிகள் எடுத்துத் தருமாறு கேட்கிறார்.

பணத்துக்கு ஆசைப்பட்டு அங்கு செல்லும் குழுவினருக்குச் சிக்கல்.அதில் மூவர்  கொல்லப்படுகின்றனர். இறுதியாக நாயகன் ஆதர்ஷ் நாயகி காதம்பரி ஆகியோர் மட்டும் இருக்கிறார்கள். நாயகனைக் கொல்ல காதம்பரி முயல்கிறார். அவர் ஏன் நாயகனைக் கொல்ல நினைக்க வேண்டும்? என்பதற்கான விடையாகப் படம் இருக்கிறது.

தலைப்பில் இருக்கும் நாயாடி என்றால் என்ன?

கேரளாவின் மிகவும் பிற்படுத்தப்பட்ட பழங்குடி இனப்பிரிவுகளில் ஒரு குழுதான் நாயாடிகள். அடிமைகளாக இருந்த அம்மக்கள் மனிதர்களிடமிருந்தும் விலங்குகளிடமிருந்தும் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள பில்லி சூனியம் உள்ளிட்ட மாந்தீரிகங்களை கற்றுக்கொள்கின்றனர்.  கூடு விட்டுக் கூடு பாயும் கலையில் வல்லவர்கள்.அப்படிப்பட்ட இனக்குழுவுக்கு நிகழ்ந்த ஆபத்தின் பின்விளைவாக இந்தக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது.

இயக்குநர் ஆதர்ஷ் மதிகாந்தனே நாயகனாகவும் நடித்திருக்கிறார். அதனால் அந்த வேடத்துக்குப் பொருத்தமாக இருக்கிறார்.

நாயகி காதம்பரியும் குறைவைக்கவில்லை.ஏற்கெனவே அவர் நடித்ததைப் பார்க்காதவர்கள், யார் இவர்? என்று கேட்குமளவுக்கு நடித்திருக்கிறார்.

அரவிந்த், ரவிச்சந்திரன், கீதாலட்சுமி உள்ளிட்டு படத்தில் நடித்தவர்கள் எல்லாம் அளவாக இருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் மோசஸ்டேனியலுக்குப் பெரிய வாய்ப்புகள் இல்லையென்றாலும் கிடைத்த வாய்ப்பில் குறைவைக்கவில்லை.

இசையமைப்பாளர் அருண் பின்னணி இசையில் கவனிக்க வைத்திருக்கிறார்.

எழுதி இயக்கியிருக்கும் நாயகன் ஆதர்ஷ் மதிகாந்தன், வழக்கமான் ஒரு பேய்க்கதைக்குப் பின்புலத்தில் நாயாடி என்கிற பழங்குடிகளின் கதையை வைத்து படத்தை வேறுபடுத்திக் காட்டியிருக்கிறார்.

– குமார்.

Related Posts