சினிமா செய்திகள்

எச்.வினோத் – கமல் கூட்டணியில் மாற்றம் – புதிய தகவல்

கமல்ஹாசன் இப்போது ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அந்தப்படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதிக்குள் முடிவடைந்துவிடும் என்று சொல்லப்பட்டது. ஆனால் திட்டமிட்டபடி முடியவில்லையாம். இன்னும் ஒரு மாதம் வரை நீடிக்கும் என்றும் ஜூலை மாத இறுதியில் நிறைவடையும் என்றும் சொல்கிறார்கள்.

இப்படத்துக்கு அடுத்து எச்.வினோத் இயக்கும் படத்தில் நடிப்பார் என்றும்,
அண்மையில் நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் எச்.வினோத் ஆகியோர் சந்திப்பையொட்டி கமல் 233 படம் உறுதியாகிவிட்டதெனவும் செய்திகள் வந்தன.

இப்போது, எச்.வினோத் இயக்கும் படத்தில் கமல்ஹாசன் கதாநாயகன் என்பதில் முழு உண்மையில்லை என்கிறார்கள்.

அப்படியானால் எது முழு உண்மை?

அடுத்து எச்.வினோத் இயக்கும் படத்தின் நாயகன் விஜய்சேதுபதிதானாம்.

விரைவில் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறதாம். அந்தப்படத்தில் முக்கியமான வேடம் ஒன்று இருக்கிறதென்றும் அந்த வேடத்தில் கமல் நடித்தால் சிறப்பாக இருக்கும் என்றும் படக்குழு முடிவு செய்திருக்கிறது.

அதுதொடர்பாக, கமல்ஹாசனிடம் கேட்டிருக்கிறார்கள். அவரும் கதையை முழுமையாகக் கேட்டதோடு அதில் அவருடைய வேடம் பற்றியும் அதன் முக்கியத்துவத்தையும் உணர்ந்து நடிக்க ஒப்புக்கொண்டார் என்று சொல்கிறார்கள்.

அந்த வேடம், கிட்டத்தட்ட மறைந்த மாமேதை நம்மாழ்வார் போன்றது என்றும் அதனால் அதில் நடிக்க கமல்ஹாசன் ஒப்புக்கொண்டதாகவும் சொல்லப்படுகிறது.

அதனால்தான், பாரம்பரிய நெல் பாதுகாப்பு அமைப்பினரின் சந்திப்பின்போது இயக்குநர் எச்.வினோத்தையும் உடன் வைத்திருந்தார் கமல்ஹாசன் என்கிறார்கள்.

அப்படின்னா அந்தப்படத்தில், தரமான சம்பவம் இருக்கு என்று நம்பலாம்.

Related Posts