குஷி – திரைப்பட விமர்சனம்
திகட்டத் திகட்ட ஒரு காதல் அதன்பின் திருமணம் அதற்குப் பின் கணவன் மனைவி சண்டை எனப்போனால் அது ஏற்கெனவே வந்த கதையாகிவிடும். எனவே அதனுடன் ஆத்திகத்துக்கும் நாத்திகத்துக்குமான மோதலை வைத்து அதன் விளைவுகள் என்னென்ன? என்பதைச் சேர்த்து புதியதாக்கிக் குஷி படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஷிவநிர்வானா.
திகட்டத் திகட்டக் காதலுக்கு மிகப்பொருத்தமான இணையராக விஜய்தேவரகொண்டாவும் சமந்தாவும் இருக்கிறார்கள்.படத்தில் அவர்கள் காதலித்துக் கொண்டிருக்க நிஜத்தில் இளைஞர்கள் சமந்தாவையும் யுவதிகள் விஜய்தேவரகொண்டாவையும் காதலிக்கும் வண்ணம் அவர்கள் இருக்கிறார்கள்.காட்சிகளும் இருக்கின்றன.
ஆந்திரப்பிரதேசம் என்கிற எல்லைகள் தாண்டி எல்லோரையும் ஈர்க்கிறார்கள் இருவரும்.
விஜய்தேவரகொண்டாவின் அப்பா லெனின்சத்யமாக வரும் சச்சின் கெட்கர், சமந்தாவின் அப்பா ஆன்மீகச் சொற்பொழிவாளர் ஸ்ரீனிவாசராவ் ஆக நடித்திருக்கும் முரளிசர்மா ஆகிய இருவரும் படத்தின் தன்மையை மாற்றியமைத்துவிடுகின்றனர்.
ரோகிணி, ஜெயராம் உள்ளிட்டோரும் இயல்பாக நடித்துத் திரைக்கதைக்கு உதவி செய்திருக்கின்றனர்.
இரண்டு வீடுகளுக்குள் அடங்கிவிடுகிற கதையாக இருந்தாலும் அதைச் சொல்வது காட்சி ஊடகத்தில் என்பதால் காஷ்மீர் உட்பட பல பகுதிகளுக்குச் சென்று விருந்து படைத்திருக்கிறது முரளி.ஜியின் ஒளிப்பதிவுக்கருவி. சமந்தா. விஜய்தேவரகொண்டா ஆகியோரையும் புதுப்பித்துக் கொடுத்திருக்கிறார்.
ஹிஷாம் அப்துல் வஹாப்பின் இசையில்,என் ரோஜா நீயா, ஆராத்யா ஆகிய பாடல்கள் கேட்கவும் பார்க்கவும் இனிமையாக அமைந்திருக்கின்றன.
ஆத்திகத்துக்கும் அறிவியலுக்குமான விவாதங்கள் குறித்த வசனங்கள் கவனம் பெறுகின்றன.தெலுங்கில் எடுக்கப்பட்ட படம் என்று சொன்னால்தான் தெரியும் என்கிற மாதிரி தமிழில் மாற்றிக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் விஜய்பாலாஜி.
காதல் என்பது இரு மனங்களின் சங்கமம் கல்யாணம் என்பது இரு குடும்பங்களின் இணைவு.இருகுடும்பங்கள் என்றாலே இரண்டு கருத்துகள் வந்துவிடுவது இயல்பு. அவ்விரு கருத்துகளும் இரண்டு மனங்களுக்கும் இடைவெளியை ஏற்படுத்தும் எதார்த்தம். அவ்விரு கருத்துகள் ஆத்திகம் நாத்திகம் என்றிருந்துவிட்டால் என்னவெல்லாம் நடக்கும்? என்று சிந்தித்திருக்கிறார் இயக்குநர்.
அதன் இறுதியில் அவர் சொல்லியிருக்கும் முடிவு வரவேற்கத்தக்கது.
– இளன்











