ஏழாண்டுகளுக்குப் பிறகு திரும்பிவந்த மெளனகுரு இயக்குநர்
அருள்நிதி இனியா உள்ளிட்ட பலர் நடிப்பில் 2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான படம் ‘மௌன குரு’.
அப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது.
அதனால் அப்படத்தை இயக்கிய சாந்தகுமாருக்கு நிறைய வாய்ப்புகள் தேடி வந்தன. ஆனால் எல்லாவற்றிலிருந்தும் விலகியிருந்த அவர் இப்போது திரும்ப வந்திருக்கிறார்.
ஸ்டூடியோ கிரீன் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘மகாமுனி’.
இதில் நடிகர் ஆர்யா, நடிகை மஹிமா நம்பியார், இந்துஜா, ஜுனியர் பாலையா, ஜெயப்ரகாஷ், அருள் தாஸ், ஜி எம் சுந்தர், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் சாந்தகுமார்.
இந்தப் படத்தின் ஒளிப்பதிவை அருண் பத்மநாபன் கவனிக்க, எஸ் எஸ் தமன் இசையமைக்கிறார். பாடல்களை கவிஞர் முத்துலிங்கம் எழுதுகிறார். தேசிய விருதுபெற்ற விஜே சாபு ஜோசப் படத்தை தொகுக்க, ரெம்போன் பால்ராஜ் கலை இயக்குநராக பணியாற்றுகிறார். சண்டை பயிற்சியை ஆக்சன் பிரகாஷ் மேற்கொள்கிறார்.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில்,“க்ரைம் திரில்லர் ஜேனரில் ‘மகாமுனி ’ தயாராகிறது. படத்தின் திரைக்கதை அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் பரபரப்பாக அமைக்கப்பட்டிருக்கிறது. சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளோம்.’ என்றார்.
மகாமுனி படத்தின் தொடக்கவிழா இன்று காலை சென்னையில் எளிமையாக நடைபெற்றது. இதன் போது படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, படத்தின் இயக்குநார் சாந்தகுமார், நாயகன் ஆர்யா, நாயகி இந்துஜா, ஒளிப்பதிவாளர் அருண் பத்மநாபன், கலை இயக்குநர் ரெம்போன் பால்ராஜ், எடிட்டர் விஜே சாபு ஜோசப் உள்ளிட்ட படக்குழுவினரும், தொழில்நுட்பக் கலைஞர்களும் கலந்துகொண்டனர்.











