சினிமா செய்திகள்

6 நாட்களில் 36 நடிகர்கள் – பொன்னியின்செல்வன் படப்பிடிப்பு விவரங்கள்

கார்த்தி, விக்ரம்,ஜெயம்ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சரத்குமார், பிரகாஷ்ராஜ், பார்த்திபன், விக்ரம் பிரபு, லால், அஸ்வின், ரியாஸ்கான், பிரபு, ஜெயராம் உள்ளிட்ட பலர் நடிப்பில் மணிரத்னம் இயக்கும் படம் பொன்னியின் செல்வன். ஒளிப்பதிவாளராக ரவிவர்மன், இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரகுமான், கலை இயக்குநராக தோட்டாதரணி ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது.

இப்படத்தின் முதல்கட்டப்படப்பிடிப்பு 2019 டிசம்பரில் தொடங்கியது. அதன்பின் பல தடைகள் சிக்கல்களைத்தாண்டி படப்பிடிப்பு நடைபெற்றுவந்தது.

இரண்டு பாகங்களாக வெளியிடத் திட்டமிடப்பட்டிருக்கும் இப்படத்தின் முதல்பாகத்துக்கான பெரும்பகுதிப் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டதாம். இன்னும் சில நாட்கள் படப்பிடிப்பு நடத்தினால் முதல்பாகம் நிறைவு பெற்றுவிடும் என்கிறார்கள்.

இந்நிலையில், அடுத்தகட்டப் படப்பிடிப்புக்கான வேலைகள் நடந்து கொண்டிருந்தபோது மீண்டும் கொரோனா அச்சுறுத்தல் வந்துள்ளது.
இதனால் வேலைகள் நின்றுபோயிருந்தது.

இப்போது மீண்டும் படப்பிடிப்புகள் நடத்த அனுமதி கிடைத்திருப்பதால் பொன்னியின்செல்வன் படத்தின் அடுத்தகட்டப் படப்பிடிப்பு நாளை புதுச்சேரியில் தொடங்கவிருக்கிறது.

ஆறுநாட்கள் மட்டுமே திட்டமிடப்பட்டிருக்கும் இப்படப்பிடிப்பின் முதல்நாளில் கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யாராய் ஆகியோர் கலந்து கொள்ளவிருக்கிறார்களாம்.

அடுத்தடுத்த நாட்களில் படத்தில் பங்கு பெறும் எல்லா நடிகர்களும் கலந்துகொள்ளவிருக்கிறார்களாம். இதோடு முதல்பாகத்தின் பெரும்பகுதி நிறைவுக்கு வந்துவிடும் என்கிறார்கள்.

Related Posts