சினிமா செய்திகள்

எந்தப் பின்புலமும் இல்லாமல் வளர்ந்தது எப்படி? – சரண்யா ரவிச்சந்திரன் பேட்டி

திருச்சி அருகே உள்ள கே.கள்ளிக்குடி என்ற கிராமத்தில் பிறந்து,அங்கேயே காவேரி கல்லூரியில் பி.எசி.மைக்ரோபயாலஜி படித்த பின், சென்னையில் வேலை கிடைத்துவிட்டதாகப் பொய்சொல்லிவிட்டு சென்னை வந்தவர், கலகலப்பான பேச்சுக்காகவே தீரன் மற்றும் எம்.கே தொலைக்காட்சி உட்பட சில இடங்களில் தொகுப்பாளராகப் பணிபுரிந்தவர், கறுப்பு நிறம் என்பதால் பிரபலமாக முடியாது என்று பலரால் விமர்சிக்கப்பட்ட நேரத்தில், சோர்ந்துவிடாமல்,பேட்டி எடுக்கும் இடத்தில் இல்லாமல் பேட்டி கொடுக்கும் இடத்துக்குப் போனால் என்ன? என்று நேர்மறையாகச் சிந்தித்தவர். அதன் விளைவு இதுவரை சுமார் ஐம்பது படங்களில் நடித்ததோடு, இந்த வேடமா? இதற்கு இவர் பொருத்தமாக இருப்பார் என்று படைப்பாளிகளை எண்ண வைக்கும் இடத்துக்கு உயர்ந்திருப்பவர் சரண்யா ரவிச்சந்திரன்.

அண்மையில் இயக்குநர் சுப்ரமணியம் சிவா இயக்கத்தில் வெளியான வெள்ளை யானை படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடித்திருக்கும் அவரிடம் ஒரு நேர்காணல்..

1. எல்லோருக்கும் தெரியும் இடத்துக்கு உங்களைக் கொண்டு வந்த படம் எது?

திரைப்படங்கள் மட்டுமின்றி 130 க்கும் மேற்ப்பட்ட குறும்படங்களிலும் நடித்திருக்கிறேன். அவற்றில் காவல் தெய்வம், கதையின் நாயகி ஆகியன எனக்கு நல்ல பெயரையும் நல்ல அறிமுகத்தையும் கொடுத்தது. ஆட்டோ சங்கர் வெப் சீரீயல்,இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு, சீறு உள்ளிட்ட பல படங்கள் என்னைப் பலருக்கும் தெரியவைத்தவை. அண்மையில் வெளியான வெள்ளை யானை படமும் அந்தப்பட்டியலில் சேர்ந்துள்ளது.

2.எந்த வேடமென்றாலும் உள்வாங்கி இயல்பாக நடிப்பார் என்று சொல்கிறார்கள். இது எப்படி நடந்தது?

மறைந்த அருண்மொழி சார் உட்பட ஆறு இடங்களில் நான் நடிப்புப் பயிற்சி பெற்றிருக்கிறேன். பல மூத்தோர்களுடன் நாடகங்களில் நடித்துருக்கிறேன். நான் நடித்த குறும்பட அனுபவங்கள், புத்தக வாசிப்பு, படங்கள் பார்ப்பது,பொது வெளிகளில் மக்கள்களின் நடை ,அசைவுகளை நிறைய கவனித்தல் இவையெல்லாம் இயக்குநர்கள் சொல்வதை உள்வாங்கி நடிக்க உதவியாகவுள்ளது.

3. நிறைய புத்தகங்கள் வாசிக்கிறீர்கள். இந்தப்பழக்கம் எப்படி வந்தது?

அதற்கு விதை போட்டது என் வாத்தியார் அருண்மொழி சார் தான். அப்புறம் எனக்கு ஒரு காட் ஃபாதர் இருக்கிறார். பெயர் வேண்டாம். அவரும் நிறையப் படிக்க சொல்வார். இருவர் தூண்டுதலாலும் புத்தகங்கள் வாசிக்கத் தொடங்கிய எனக்கு அடச்சே, ஏன் நம்ம இந்தப்பழக்கத்தை பள்ளி, கல்லூரிகளில் தொடங்கவில்லை என்று பல நாட்கள் பொலம்பியிருக்கிறேன். படப்பிடிப்புத் தளத்தில் பீரீ டைம்ல புத்தகம் படித்துக் கொண்டிருப்பதைப் பார்த்த சிலர், என்ன இயக்குநராகப் போகிறீர்களா? என்றல்லாம் கேட்டிருக்கிறார்கள். அதற்கு என் பதில் ஒரு நடிகை என்றில்லாமல் பொதுவாக புத்தக வாசிப்பு என்பது நல்ல விசயம் தானே என்றிருக்கும்.

4.எல்லாப் படங்களிலும் சின்ன வேடம் அதேசமயம் பெரிய இயக்குநர்கள் படங்களில் இருக்கிறீர்கள். எப்படி?

இன்னும் என் பயணம் தொடங்கவேல்லைங்க. போக வேண்டிய தூரம் நிறைய உள்ளது. வாய்ப்பிற்காக நான் ஏறி இறங்காத திரைப்பட அலுவலகங்களே கிடையாது. முதல் நாள் இரவு தூங்கப்போகும் முன்பே நாளை பாலோப்புகளையும்,பார்க்க வேண்டிய மனிதர்களை குறித்து வைத்துக்கொள்வேன். பிரசாத் லேப்,சத்யம் தியேட்டரில் நடக்கும் சினிமா நிகழ்வுகளை விட மாட்டேன். அந்தப்படங்களில் எல்லாம் நான் நடிக்காவிட்டலும் கான்டக்டிற்காக செல்வேன்.ஓர் உதவி இயக்குநர் முதன்முறை இயக்க அலுவலகம் போட்டிருக்கிறார் என்றாலும் பிரபல இயக்குநர் புதிய படத்துக்காக அலுவலகம் போட்டிருக்கிறார் என்றாலும் அங்கே நான் இருப்பேன். அதனால் எல்லோருக்கும் தெரிந்தவளாகிவிட்டேன்.அதோடு ஒரு படம் பார்த்துவிட்டு இன்னொரு படம் என்று நடித்தது தான்.

5.அப்படி என்றால் புதிய இயக்குநர்கள் மற்றும் சின்னப் படங்களில் உங்களை அதிகம் பார்த்ததில்லையே?

சின்னப்படம் பெரிய இயக்குநர் படம் என்றெல்லாம் இல்லாமல் ஒரு நாள் நடித்தாலும் அதில் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கவேண்டும் என்று நினைப்பேன். அதுபோன்று அமையும் வேடங்களில் மட்டுமே
நடிக்கிறேன்.

ஆரம்ப காலத்தில் நான் கேரக்டர் ரோல்க்குத்தான் நடிக்கப் போயிருப்பேன் அப்போ
படப்பிடிப்புத் தளத்தில் ஓரமாக எங்க இடம் இருக்கோ பார்த்து உட்கார்ந்து இருப்பேன். அப்படத்தில் பணியாற்றும் உதவி இயக்குநர்கள் நான் லோக்கேசன்ல ஓரமா அமைதியாக உட்கார்ந்திருப்பதைப் பார்த்து யாரோ பேக்ரவுண்டு ஆர்டிஸ்ட் என்று நினைத்துக் கொண்டு போவார்கள். அன்றைய காட்சியில் நான் டயலாக் பேசி நடித்ததுக்கு அப்புறம் தான் அவங்களுக்குத் தெரிந்து நம்முடன் வந்து பேசாங்க. எனக்கு தெரிந்து இதை நான் மட்டும் இல்லை நிறைய பேர் கடந்திருப்பாங்க.ஒண்ணே ஒண்ணுதாங்க எங்கயுமே நம்ம வேலையை ஈடுபாட்டுடன் சரியாகச் செய்தால் நல்ல வரவேற்பும் மரியாதையும் கொஞ்சம் தாமதம் ஆனாலும் கண்டிப்பாக கிடைக்கும்.

6. எவ்வித திரைத்துறை பின்புலமும் இல்லாமல் கிராமத்திலிருந்து வந்து இத்துறையில் அடையாளப்படும் துணிவு எங்கிருந்து வந்தது? உங்கள் குடும்பம் இதை எப்படி எடுத்துக் கொண்டது?

எல்லாம் விதி தான் என்று சொல்லிச் சிரித்து விட்டு தொடர்கிறார்,

முதலில் நான் எங்க வீட்டில் சினிமாவில் நடிக்கிறேன் என்றதுமே பயந்தார்கள்.
அம்மாவிற்குத்தான் அதிக பயம்.பிறகு, கீரீன் சிக்னல். அதாவது நான் என்ன ஆசைப்பட்டாலும் என் அப்பாவிற்கு அதை நிறைவேற்ற வேண்டும். அதான் எங்க அப்பா. எனக்கு உள்ள மனதைரியம், தன்னம்பிக்கை எல்லாமே என் அப்பாகிட்ட இருந்து வந்தது. எனக்கு வாசுதேவன், மணிகண்டண் என்று இரு தம்பிகள். அவங்களும் எனக்கு பெரிய பலம்.

7. சர்ச்சைகள் எதிலும் சிக்கியதில்லையா?

எந்தத் துறையாக இருந்தாலும் அதில் கீழே இருந்து ஒருவர் மேலே வருகிறார் என்றால் பல இன்னல்களைச் சந்திக்கவேண்டும்.இந்தத் துறையில் கேட்கவே வேண்டாம். எனக்கும் சிக்கல்கள் வந்தன. ஆனால் அவற்றில் கவனம் செலுத்தாமல் அடுத்து நடிக்க வேண்டிய வேடத்தை எப்படி சிறப்பாகச் செய்யலாம்? என்று யோசித்ததால் சர்ச்சைகள் என்னை ஒன்றும் செய்யவில்லை.

8. உங்கள் பலம்..?

பெருசா சாதிக்கணும்னு நினைக்கற வெறி. அந்தப்பசி தான் என் பலம்.
பலவீனம் : சினிமா (என்னால விட்டுப்போகவே முடியாது). என்னை ரொம்ப சுலபமா அழ வச்சுடும்.

9. இப்போது நடிக்கும் படங்கள்..?

வலிமை, எனிமி , இந்தியன் 2 உட்பட பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன்.

10. தனி கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு வரவில்லையா?

அதுகுறித்துப் பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன. விரைவில் அப்படி நடக்க சாய்ராம் அருள்புரிவார் என நம்புகிறேன்.

– வெற்றிச்சூரியன்

Related Posts