ஐநாக்ஸ் மல்டிப்ளக்ஸ் திரையரங்குகள் செய்த ஒப்பந்தம் சரியா?
எட்டாவது 20 ஓவர் உலகக் கோப்பை மட்டைப்பந்துப் போட்டி ஆஸ்திரேலியாவில் வருகிற 16 ஆம் தேதி தொடங்குகிறது.
இத்தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி உள்பட 16 அணிகள் களமிறங்குகின்றன.
இதில் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் கால்பதிக்கும் இந்திய அணி, தனது தொடக்க ஆட்டத்தில் வருகிற 23 ஆம் தேதி பாகிஸ்தானுடன் மோதுகிறது.
இந்த நிலையில் உலகக்கோப்பை டி-20 மட்டைப்பந்துப் போட்டித் தொடரில் இந்திய அணி விளையாடும் போட்டிகள், ஐநாக்ஸ் திரையரங்குகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்ட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மற்றும் ஐநாக்ஸ் நிறுவனம் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
இதன்படி நாடு முழுவதும் 25 க்கும் மேற்பட்ட நகரங்களில் உள்ள ஐநாக்ஸ் மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் டி-20 உலகக்கோப்பை மட்டைப்பந்துப் போட்டிகள் நேரலையாக திரையிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வு பலத்த விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது.
மட்டைப்பந்துப் போட்டிகளைக் காண இளைஞர்கள் திரையரங்குகளுக்கு வருவார்கள் என்று நம்பி இந்த ஒப்பந்தம் நடந்திருக்கிறது. ஏற்கெனவே திரையரங்கு நுழைவுச்சீட்டு விலை மற்றும் தின்பண்டங்கள் விலை காரணமாக திரையரங்குக்குச் சென்று படம் பார்ப்பதையே மக்கள் தவிர்க்கின்றனர் எனும் நிலை.
இப்படியிருக்கும்போது கைபேசி முதல் தெருவோர தொலைக்காட்சிக் கடை உட்பட எல்லா இடங்களிலும் காணக்கிடைக்கும் மட்டைப்பந்துப் போட்டியைச் செலவு செய்து திரையரங்கில் வந்து பார்ப்பார்களா? இந்தத் திட்டம் படுதோல்வி அடையும் என்று பலரும் சொல்கின்றனர்.












