சினிமா செய்திகள்

ஜனநாயகன் தமிழ்நாடு வியாபாரம் விஜய் பரிந்துரை நிராகரிப்பு – விவரம்

எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ஜனநாயகன் படம் 2026 சனவரி 9 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.இப்படத்தை பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்ட கேவிஎன் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.

வெளியீட்டுத் தேதி அறிவித்து பல மாதங்கள் ஆனபின்னும் அப்படத்தின் தமிழ்நாடு திரையரங்கு வெளியீட்டு உரிமை விற்பனையில் பெரும் இழுபறி நீடித்து வந்தது.

இந்தப்படத்துக்கு தயாரிப்பு நிறுவனம் சொன்ன விலை சுமார் 120 கோடி.விஜய்யின் முந்தைய படமான தி கோட் தமிழ்நாட்டில் சுமார் 103 கோடி தயாரிப்பாளரின் பங்காகக் கொடுத்தது என்பதால் ஜனநாயகன் விலை 120 கோடி என்பது நிறுவனத்தின் கணக்காக இருந்தது.

ஆனால், இந்த விலை அதிகம் என்று சொல்லி யாரும் வாங்க முன்வரவில்லை.

இதனால், விஜய்யுடன் இருக்கும் ஜெகதீஷ் என்பவர், ரோமியோ பிக்சர்ஸ் ராகுலை அழைத்துக் கொண்டுபோய், விஜய் இவருக்கு தமிழ்நாடு உரிமையைக் கொடுக்கச் சொன்னார் என்று சொல்லியிருக்கிறார்.

விஜய் சொல்லியிருக்கிறார் என்று ஜெகதீஷ் சொன்னதை நம்பி கேவிஎன் நிறுவனமும் ராகுலுக்குப் படத்தைக் கொடுக்க முன்வந்ததாம்.

தமிழ்நாடு, கேரளா ஆகிய இருமாநிலங்களுக்கும் சேர்த்து சுமார் 115 கோடிக்கு ராகுல் வாங்கிக் கொள்வதாகப் பேசப்பட்டதாம்.

ஐம்பது கோடி முன் தொகை கொடுத்தால் ஒப்பந்தம் போட்டுவிடலாம் என்று தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது.பேச்சு வார்த்தை நடத்தி இரண்டு மாதங்கள் ஆகிவிட்டபோதும் ராகுலால் சொன்னபடி பணம் கொடுக்க முடியவில்லையாம்.அதேசமயம், ஜனநாயகன் படத்தை நான் தான் வாங்குகிறேன், வாங்கி உங்களுக்கு ஒரு பகுதி விநியோக உரிமை கொடுக்கிறேன் என்று பலரிடம் பணம் வாங்கியதாகச் சொல்லப்படுகிறது.

அவ்வாறு ஒருவரிடம் ஐந்து கோடியை வாங்கிவிட்டு படநிறுவனத்துக்கு மூன்று கோடி அனுப்பியிருக்கிறார் ராகுல்.பணம் கொடுத்த நபர் கேவிஎன் நிறுவனத்திடம் இந்தத் தகவலைச் சொல்லிவிட்டாராம்.

இப்படிப்பட்டவரையா விஜய் பரிந்துரைத்தார் என்று நொந்தபடி ராகுலை அழைத்து உங்களுக்குப் படம் கிடையாது என்று சொல்லிவிட்டதாம்.

அதன்பின், ஏஜிஎஸ் நிறுவனத்தைச் சேர்ந்த மாலி என்பவரது ஆலோசனைப்படி தமிழ்நாடு உரிமையை ஒருவருக்கே கொடுக்காமல் பிரித்துப் பிரித்துக் கொடுத்துவிடும் முடிவை எடுத்திருக்கிறார்கள்.

இப்படிச் செய்தால், நான் சொன்னவருக்குப் படம் கொடுக்கவில்லை என விஜய் வருத்தப்படுவாரே? என்கிற கேள்வி வந்திருக்கிறது.

இது ஒவ்வொருவராகப் பேசி கடைசியில் கேவிஎன் நிறுவன அதிபரிடம் போனபோது, விஜய் பற்றிக் கவலைப்பட வேண்டாம்.நமக்கு எது சரியோ? அதைச் செய்யுங்கள் என்று சொல்லிவிட்டாராம்.

இதை அறிந்த விஜய் மற்றும் ஜெகதீஷ் ஆகியோர் கடும் அதிர்ச்சி அடைந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ள முடியாத நிலையில் இருக்கிறார்களாம்.

இந்நிலையில், தமிழ்நாட்டின் விநியோகப்பகுதிகளான சென்னை, செங்கல்ப்ட்டு, வட ஆற்காடு, தென் ஆற்காடு, கோவை, சேலம், திருச்சி,மதுரை, திருநெல்வேலி ஆகிய பகுதிகளுக்கு தனித்தனியாக வியாபாரம் செய்யப் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

இவை எல்லாம் சேர்ந்து சுமார் 95 கோடிக்கு விற்கப்படும் என்று சொல்லப்படுகிறது.இவற்றில் முன்பின்னாகச் சில மாற்றங்கள் இருக்கலாம்.

ஒப்பந்தம் கையெழுத்து ஆனால்தான் முழுமையான விவரம் வெளியாகும் என்று சொல்கிறார்கள்.

என்ன நடக்கப் போகிறதெனப் பார்க்கலாம்.

Related Posts