மிரட்டும் மகேஷ்பாபு அரட்டும் அக்ஷய்குமார் நெருக்கும் நிவின்பாலி – கமலுக்கு இவ்வளவு சோதனைகளா?
லோகேஷ்கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய்சேதுபதி, ஃபகத்பாசில் உட்பட பலர் நடித்துள்ள படம் விக்ரம்.
ராஜ்கமல் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப்படத்தின் மூலம் சுமார் நான்காண்டுகளுக்குப் பிறகு திரையரங்குகளுக்கு வருகிறார் கமல்.
இப்போது பெருமளவில் புழக்கத்தில் இருக்கும் பான் இந்தியா படமாக இதை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார் கமல்.
அதனால், தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா,கேரளா, கர்நாடகா மற்றும் வடமாநிலங்களில் படத்தை வெளியிடவிருக்கிறார்.
இந்நிலையில் எல்லா மாநிலங்களிலும் அவருக்குச் சோதனை ஏற்பட்டுள்ளதென்கிறார்கள்.
குறிப்பாக மிகப்பெரிய சந்தையையுடைய இந்தி மாநிலங்களில் விக்ரம் படம் வெளியாகும் அதே ஜூன் 3 ஆம் தேதி அக்ஷய்குமார் நடிப்பில் உருவாகியுள்ள பிருத்விராஜ் என்கிற படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
சுமார் ஐநூறு கோடி செலவில் அந்தப்படம் தயாராகியுள்ளதாகவும் அதை வெற்றிப்படமாக்கியே தீரவேண்டும் எனும் முனைப்பில் அதற்கான விளம்பரங்கள் செய்வது, அதிக அளவில் திரையரங்குகள் ஒப்பந்தம் செய்வது என அவர்கள் இறங்கிவிட்டதால் கமலுடைய விக்ரம் படம் அமுங்கிப் போய்விட்டதென்கிறார்கள்.
அதேபோல, கேரளாவில் ஜூன் 3 ஆம் தேதி நிவின்பாலி நடித்துள்ள துறைமுகம் எனும் படம் வெளியாகவிருக்கிறது.மலையாள இயக்குநர்களில் குறிப்பிடத்தக்கவரான ராஜீவ்ரவி இயக்கியுள்ளார். இதனாலும் சுமார் இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு நிவின்பாலி நடித்த படம் வெளியாகிறது என்பதாலும் அப்படத்துக்கு அதிக அளவில் திரையரங்குகள் ஓப்பந்தம் செய்திருக்கிறார்களாம்.
தெலுங்கிலும் ஜூன் 3 அன்று தெலுங்கின் முன்னணி நடிகர் மகேஷ்பாபு படநிறுவனம் தயாரிப்பில் பாகுபலி புகழ் அடிவிசேஷ் நடித்துள்ள மேஜர் எனும் படம் வெளியாகிறது. 2008 ஆம் ஆண்டு மும்பை தாக்குதல்களின்போது மரணமடைந்த மேஜர் சந்தீப் உன்னிகிருஷ்ணன் வாழ்க்கையை மையமாகக் கொண்டு வெளியாகும் படம் என்பதால் இதற்கும் பெரிய எதிர்பார்ப்பு மற்றும் அதிகத் திரையரங்குகள் கிடைத்திருக்கின்றன.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு படத்தை எடுத்து அதை இந்தியாவெங்கும் வெளியிட்டு பெரும் வெற்றியைப் பெற்றுவிடவேண்டும் என்கிற வேகத்தில் ஓடிக்கொண்டிருக்கும் கமலுக்கு ஒவ்வொரு மாநிலத்திலும் இவ்வளவு இடையூறுகள்.
அவற்றைத்தாண்டி சாதிப்பாரா? என்பது ஜூன் 3 ஆம் தேதிக்குப் பிறகு தெரியும்.











