சிம்புவின் பத்துதல படம் குறித்துப் பல வதந்திகள் – உண்மை என்ன?
சிம்பு நடிப்பில் கெளதம்மேனன் இயக்கும் வெந்து தணிந்தது காடு படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது.
இதற்கடுத்து சிம்பு ஏற்கெனவே ஒப்புக்கொண்டபடி பத்துதல படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்று சொல்லப்பட்டது.
ஆனால், அப்படத்தின் படப்பிடிப்பு குறித்து எந்தத் தகவலும் இல்லை. அதுமட்டுமின்றி அப்படம் குறித்து எதிர்மறைச் செய்திகள் உலவுகின்றன.
சிம்புவின் சந்தை மதிப்பு தற்போது உயர்ந்திருப்பதால் இந்தப்படத்தில் நடிக்க ஏற்கெனவே ஒப்புக்கொண்ட சம்பளத்தைவிட அதிகச் சம்பளம் கேட்கிறார். தயாரிப்பு நிறுவனம் அதிகச் சம்பளம் தரத் தயக்கம் காட்டுவதால் சிம்பு படப்பிடிப்புக்கு வரமறுக்கிறார் என்று சொல்லப்படுகிறது.
இன்னொரு பக்கம், சிம்பு படப்பிடிப்புக்கு வரத் தயாராகிவிட்டார், ஆனால் அவருடன் நடிக்க வேண்டிய கவுதம்கார்த்திக் வேறொரு படப்பிடிப்பில் இருக்கிறார். அப்படத்தில் அவர் மாறுபட்ட தோற்றத்தில் நடிப்பதால் அப்படத்தை முடித்துவிட்டுத்தான் வருவேன் என்று சொல்லிவிட்டார். அதனால் படப்பிடிப்பு தாமதமாகிறது என்றும் சொல்லப்படுகிறது.
மூன்றாவதாக, தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவிடம் இப்படத்தின் படப்பிடிப்பை நடத்தப் பணம் இல்லை எனவே படப்பிடிப்பு தாமதமாகிறது என்றும் சொல்கிறார்கள்.
இவைகுறித்து படக்குழு தரப்பில் விசாரித்தால்,
யார் இப்படியெல்லாம் கிளப்பிவிடுகிறார்கள் என்று தெரியவில்லை. எங்களைப் பொறுத்தவரையில் எல்லாம் சரியாகப் போய்க்கொண்டிருக்கிறது.
வெந்து தணிந்தது காடு படத்தை முடித்துவிட்டு வருகிறேன் என்று சிம்பு சொன்னார். அதன்படி அந்தப்படத்தை முடித்துவிட்டு எங்கள் படத்துக்காக உடல் எடை கூட்டுவது, தாடி வளர்ப்பது, தலைமுடி அதிகமாக வளர்ப்பது ஆகிய எல்லாவற்றையும் சரியாகச் செய்து படப்பிடிப்புக்குத் தயாராகிவருகிறார்.
கவுதம் கார்த்திக் இன்னொரு படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார். அது இன்னும் சில நாட்களில் முடிவடைந்துவிடும். உடனே எங்கள் படப்பிடிப்புக்கு வந்துவிடுகிறார்.
ஜூன் முதல்வாரத்தில் பத்துதல படப்பிடிப்பு தொடங்குகிறது. முற்றிலுமாகப் படப்பிடிப்பை நிறைவு செய்யத் திட்டமிட்டுப் பணியாற்றிவருகிறோம்.
உண்மை இப்படியிருக்க எதற்காக இவ்வளவு தவறான செய்திகள்? என வருத்தப்படுகிறது படக்குழு.












