விமர்சனம்

எம்ஜிஆர் ஆன உதயநிதி – நெஞ்சுக்கு நீதி திரைப்பட விமர்சனம்

தமிழ்த்திரைத்துறையில் வெளீப்படையாகச் சாதியச்சிக்கல்களைப் பெசுகிற படங்கள் வெளியாவது மிகவும் குறைவு. சாதியச்சிக்கல்களைப் பேசுகிற படங்களிலும் ஆதிக்கசாதி குறியீடாகத்தான் காட்டப்படும். அந்தப் படங்களிலும் இடைநிலைச் சாதியினர்தான் வில்லன்களாகக் காட்டப்படுவார்கள்.

ஆனால் முதன்முறையாக மிகவும் துணிச்சலாக, நோய்நாடி நோய்முதல் நாடி எனும் குறளுக்கு ஏற்ப இந்தப்படத்தில் முதன்மை வில்லனை அய்யர் என்றே சொல்லியிருக்கிறார்கள். 

தொழில்முறைப் பிரிவுகளுக்குள் ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கி மனித சமூகத்தைப் பிரித்து உச்சாணிக்கொம்பில் உட்கார்ந்து ஆட்டிப்படைக்கும் பார்ப்பனீயத்தையும் பார்ப்பனர்களையும் நேரடியாக வில்லனாக்கியுள்ள படம்.

வெளிநாட்டில் படித்துவிட்டு இங்குள்ள சாதியச்சிக்கல்களை அறியாத, தீட்டு என்றால் என்னவென்றே தெரியாத காவல்துறை அதிகாரி வேடத்தில் நடித்திருக்கும் உதயநிதி, அந்த வேடத்தின் கனத்தை உள்வாங்கி வெளிப்படுத்தியிருக்கிறார். 

அவருக்குக் காவல்துறை உடுப்பும் அந்த வேடத்துக்கு அவருடைய நடிப்பும் மிகப்பொருத்தம்.

ஒரு தவறு செய்தால் அதைத் தெரிந்து செய்தால் அது தேவன் என்றாலும் விடமாட்டேன் எனும் எம்ஜிஆர் பட பாடல்வரிகளுக்கேற்ப, அமைச்சர், சிபிஐ, ஆதிக்கசாதி மனோபாவம் ஆகிய வலிமையான சக்திகளுக்கு எதிராக உறுதியாகப் பேசி தன்னை ஒரு தலைவராகத் தகவமைத்துக் கொண்டிருக்கிறார் உதயநிதி.

உதயநிதியின் மனைவியாக தன்யாரவிச்சந்திரன், தாழ்த்தப்பட்ட மக்கள் தலைவராக ஆரிஅர்ஜுனன், அவருடைய இணையாக ஷிவானிராஜசேகர், காவல்துறையில் பணியாற்றும் இளவரசு, மயில்சாமி உள்ளிட்ட அனைவரும் நல்ல வரவேற்பைப் பெறுகிறார்கள்.

சுந்தரம் அய்யர் எனும் காவல்துறை ஆய்வாளர் வேடத்தில் நடித்திருக்கும் சுரேஷ்சக்ரவர்த்தி சிறப்பு. படத்துக்கு அவர் பெரிய பலமாக இருக்கிறார்.

திபுநினன்தாமஸ் இசையில் பாடல்கள் ஆழமான விசயங்களைப் பேசுகின்றன. பின்னணி இசை அளவு.

தினேஷ்கிருஷ்ணன் ஒளிப்பதிவு பொள்ளாச்சியின் அழகையும் அங்கு நிலவும் சாதிக்கொடூரத்தையும் காட்சிகளில் வெளிப்படுத்தியிருக்கிறது.

தமிழரசன் பச்சமுத்துவின் வசனங்கள் படத்தைத் தூக்கிநிறுத்தியிருக்கின்றன. பல இடங்களில் கைதட்டல் பெறுகிறார். அதிலும், எங்க தாத்தா இருந்தா போய்யா மயிறு என்றிருப்பேன் என மயில்சாமி சொல்லும் காட்சியில் அரங்கம் அமைதியாக சில நிமிடங்கள் ஆகின்றன.

இந்தியில் வெற்றிபெற்ற ஆர்டிகள் 15 படத்தின் மொழியாக்கம்தான் என்றாலும் தமிழ் மக்களுக்கு நெருக்கமாக உணரும்படி திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குநர் அருண்ராஜா காமராஜ். 

பெரியார் சிலை இரும்புவலைக்குள் இருக்கும் காட்சி, உதயநிதியின் புத்தகப்பெட்டியில் பெரியார் புத்தகம் பார்த்து சுரேஷ்சக்ரவர்த்தி அதிரும் காட்சி, டாக்டர் அனிதா கவலைப்படாதீங்க நான் உங்ககூட இருப்பேன் என உதயநிதி சொல்லும் காட்சி, இந்தி படி என்று கட்டாயப்படுத்துவது சாதியக் கொடுமைகளுக்குச் சற்றும் குறைந்ததல்ல என்பதை வெளிப்படுத்த அது ஆணவம் என உதயநிதி அழுத்தந்திருத்தமாக உச்சரிப்பது  உட்பட பல சின்னச்சின்ன காட்சிகளில் தமிழகமக்களின் பெரும் உணர்வுகளைப் பிரதிபலித்திருக்கிறார் இயக்குநர்.

எல்லோரும் சமமென்றால் யார்தான் ராஜா? என்கிற கேள்விக்கு எல்லோரும் சமமென நினைப்பவர்தான் ராஜா என்று படத்தில் தன்யாரவிச்சந்திரன் சொல்கிறார்.

உதயநிதிதான் அந்த ராஜா என படம் சொல்கிறது. 

Related Posts