விமர்சனம்

பேட்ட – திரைப்பட விமர்சனம்

2.ஓ படம் வெளியாகி 42 ஆவது நாளில் வெளியாகியிருக்கும் ரஜினியின் அடுத்த படம் பேட்ட.

கல்லூரி விடுதிக்காப்பாளராக அறிமுகமாகிற ரஜினிக்கு ஒரு முன்கதை ஒரு பின்கதை ஆகியனவற்றை வைத்து திரைக்கதை அமைத்திருக்கிறார் கார்த்திக்சுப்புராஜ்.

அடாவடியாக வேலை பெறுவதும் தான் சாப்பிடப்போகும் வேர்க்கடலையின் தோலை வேறொருவரை உரித்து வை என்று சொல்வதும் ரஜினி ஸ்டைல் என்று சொல்லியிருக்கிறார்கள். ரஜினியும் அதை ஏற்றுக்கொண்டு நடித்திருக்கிறார்.

விடுதிக்காப்பாளராக வந்த இடத்தில் விடுதியில் நடக்கும் அக்கிரமங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறார். அதன்பின் ஒரு காதலுக்காகத் தூது போகிறார். போன இடத்தில் தானும் காதலில் விழுகிறார்.

இதுவரை நடுத்தர வயது தோற்றத்தில் காளி என்கிற பெயரில் வருகிற ரஜினி பேட்டவேலன் என்கிற பெயரில் இளமையாகத் தோன்றும்போது இடைவேளை.

பேட்டவேலன் யார்? அவர் ஏன் காளியானார்? என்கிற கேள்விகளுக்கு விடை சொல்வதுதான் படம்.

ரஜினியை இளமைத்துடிப்புடன் இருப்பவராகக் காட்ட நிறைய மெனக்கெட்டிருக்கிறார்கள். அவரும் அதற்கேற்ப முயன்றிருக்கிறார். எல்லாவற்றையும் மீறி ஒரு தளர்ச்சி எட்டிப்பார்க்கிறது.

காலா படம்போல இந்துத்துவ வெறியர்களை வில்லன்களாக்கியிருப்பது இஸ்லாமிய நண்பருக்காக உயிரைப் பணயம் வைப்பது ஆகியனவற்றின் மூலம் ரஜினி யாருக்கோ எதையோ உணர்த்த விரும்புகிறாரோ? என்று எண்ணவைக்கிறது.

ரஜினி சிம்ரன் வரும் காட்சிகளை ரசனையுடன் எழுதியிருக்கிறார்கள். சிம்ரன் பழைய அழகு நடனம் நளினம் ஆகியனவற்றால் ரசிக்க வைத்திருக்கிறார்.

விஜய்சேதுபதி, இந்துத்துவ வெறியராக நடித்திருக்கிரார். ஒருவரை அடிக்கும்போது ஆண்ட்டி இண்டியன் என்று சொல்லிக்கொண்டே அடிக்கிறார். அப்போது திரையரங்கு அதிர்கிறது.

ரஜினியுடன் அவர் வருகிற காட்சிகளில் நடிப்பில் ரஜினியை மிஞ்சுகிறார். கடைசிக்காட்சியில் திக்பிரமை பிடித்தவர் போல் ரஜினியை அவர் பார்க்கும் பார்வை ரஜினி மீது கோபம் வரவழைக்கிறது.

ரஜினியின் மனைவியாக த்ரிஷா, ரஜினியின் இஸ்லாமிய நண்பராக சசிகுமார், அவர் மனைவியாக மாளவிகாமோகனன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

இந்தியில் நல்ல நடிகர் என்று பெயரெடுத்திருக்கும் நவாசுதீன்சித்திக், இந்தப்படத்தில் எதற்கு? இந்த வேடத்தில் அவர் என்ன செய்துவிட்டார்?

சனத்ரெட்டியும் மேகா ஆகாஷும் இளம்ஜோடி. அவர்களுக்கென்று தனிக்காட்சிகள் இல்லை.

இயக்குநர் மகேந்திரன், குரு.சோமசுந்தரம், பாபிசிம்ஹா, ஆடுகளம்நரேன், ராம்தாஸ், விவேக்பிரசன்னா,தென்னவன் உட்பட படத்தில் நிறைய நடிகர்கள்.

அனிருத்தின் இசையில் பாடல்கள் தாளம் போட வைக்கின்றன.

திருவின் ஒளிப்பதிவில் ரஜினி பழைய இளமையுடன் காட்சியளிக்கிறார். கதைக்கேற்ப ஒளிப்பதிவு அமைந்திருப்பதால் ஆறுதல்.

புதுசா வந்தா டீஸ் பண்ணுவிங்களாடா? நாட்டையும் மண்ணையும் நாசமாக்குற யாரையும் விடமாட்டேன், சூழ்ச்சி செய்து எதிரியை வீழ்த்தினேன் என்பன உட்பட ரஜினி பேசுகிற பல வசனங்கள் அவருடைய சொந்த வாழ்வைப் பிரதிபலிப்பதாக அமைந்திருக்கிறது.

அப்பட்டமான அரதப்பழசான ஒரு பழிவாங்கும் கதையை வைத்துக்கொண்டு ரஜினியின் இமேஜை நம்பிப் படமெடுத்திருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். முதல்பாதிவரை அவர் நினைத்த படியே அமைந்திருக்கிறது. இரண்டாம் பாதி இழுவை.

Related Posts