சினிமா செய்திகள்

அஜீத் படத்துடன் மோதல்- கார்த்தி இரசிகர்கள் கொண்டாட்டம்

முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்திருக்கும் விருமன் படம் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ளது.

இதற்கடுத்து மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படம் செப்டெம்பர் 30 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இன்று கார்த்தியின் பிறந்தநாள். அதையொட்டி பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி இருவேடங்களில் நடிக்கும் சர்தார் படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவித்திருக்கிறார்கள்.

அதன்படி, இவ்வாண்டு அக்டோபர் 24 திங்கட்கிழமை தீபாவளி. அந்நாளில் சர்தார் படம் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளீயாகியுள்ளது.

சுமார் நான்கு மாதங்களுக்கு முன்பே இப்படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவித்தது ஏன்? என்று வினவினால் சுவாரசிய தகவல் இருக்கிறது.

இவ்வாண்டு தீபாவளியையொட்டி அஜீத் இப்போது நடித்துக் கொண்டிருக்கும் படத்தை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்களாம்.அந்தத் தகவல் தெரிந்த மற்றவர்கள் வேறு தேதிகளைத் தேடிக்கொண்டிருக்க, அதனால் என்ன? நம்ம படம் நல்ல படம் நிச்சயம் வெற்றிபெறும் எனும் நம்பிக்கையில் அதேதேதியில் திரைக்கு வரத்தயாராகியிருக்கிறது சர்தார் படக்குழு.

எனவே, சர்தார் பட வெளியீட்டுத் தேதியை முன்கூட்டியே சொல்லிவிட்டார்கள்.

2019 இல் விஜய்யின் பிகில் படத்தோடு வெளியாகி மாபெரும் வெற்றியைப் பெற்றது கார்த்தியின் கைதி. 
2022 இல் அஜீத் படத்தோடு வெளியாகி அதேவெற்றியைச் சுவைக்க இருக்கிறது கார்த்தியின் சர்தார் என நம்பிக்கையுடன் சொல்கிறார்கள்.    

தனியாக வந்து வெற்றி பெறுவதைவிட அஜீத் படம் வெளியாகும் நாளில் வந்து வெற்றி பெற்றால் இரட்டிப்பு மகிழ்ச்சி என்கிறார்கள் கார்த்தி இரசிகர்கள்.

அஜீத் படத்தோடு மோதுவது அவர்களுக்குக் கொண்டாட்டம் என்பதோடு தீபாவளி நாளில் இரண்டு பெரியநடிகர்கள் படங்கள் வெளியாவதால் திரையரங்கு உரிமையாளர்களும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.

Related Posts