சினிமா செய்திகள்

லைகா தொடர்ந்த வழக்கு – விஷாலுக்கு உயர்நிதீமன்றம் புது உத்தரவு

நடிகர் விஷால் தனது விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்துக்காக திரைப்பட நிதியாளர் அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் பெற்ற 21 கோடியே 29 இலட்சம் ரூபாய் கடனை லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டு செலுத்தியது. அந்தத் தொகை முழுவதும் திருப்பிச் செலுத்தும் வரை, விஷால் பட நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டுமென்ற ஒப்பந்தத்தை மீறி, ‘வீரமே வாகை சூடும்’ என்ற படத்தை வெளியிடுவதாக விஷால் நிறுவனத்துக்கு எதிராக லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

2021 ஆம் ஆண்டு தொடக்கத்தில் தொடரப்பட்ட இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், 15 கோடி ரூபாயை டெபாசிட் செய்ய உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை இரு நீதிபதிகள் அமர்வு உறுதி செய்தது. இந்த வழக்கை நீதிபதி பி.டி.ஆஷா விசாரித்தார். இந்த வழக்கில் தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் நீதிபதி பி.டி.ஆஷா ஜூன் 5 அன்று தீர்ப்பளித்தார். லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய 21 கோடியே 29 இலட்சம் ரூபாயை 30 சதவீத வட்டியுடன் விஷால் தரப்பு வழங்கவேண்டும். வழக்குச்செலவு தொகையையும் லைகா நிறுவனத்துக்கு வழங்க விஷால் தரப்பு வழங்கவேண்டும் என்று அந்த தீர்ப்பில் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

பல்வேறு காரணங்களைச் சொல்லி இந்த வழக்கு விசாரணையைத் தள்ளிப்போட்டுக் கொண்டே வந்தார் விஷால் என்று சொல்லப்பட்டது.அதேசமயம் லைகா நிறுவனமும் விடாமல் இவ்வழக்கை உயிர்ப்பித்துக் கொண்டேயிருந்தது.இந்தத் தொடர் போராட்டத்தின் விளைவாக சுமார் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தத் தீர்ப்பு வந்தது.

இப்போது 30 விழுக்காடு வட்டி என்று கணக்குப் போட்டால் இத்தொகைக்கு மாதம் சுமார் 51 இலட்சம் வருகிறது. நான்காண்டுகளுக்குச் சேர்த்துப் பார்த்தால் சுமார் இருபத்துநான்கு கோடிக்கு மேல் செலுத்த வேண்டிவரும்.இது மட்டுமின்றி லைகா நிறுவனம் செய்த வழக்குச் செலவுத் தொகையையும் விஷாலே ஏற்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருக்கிறது.அதுவும் சில கோடிகள் வரை வரலாம் என்று சொல்லப்படுகிறது.

கடந்த ஜூன் மாதம் இந்தத் தீர்ப்பு வந்தது.அதை ஏற்காமல், இரு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்தார் விஷால்.
இந்த உத்தரவை எதிர்த்து, விஷால் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், முகமது ஷபிக் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஒரு குறிப்பிட்ட தொகையை நீதிமன்றத்தில் டெபாசிட் செய்யலாமே? என்று விஷால் தரப்பு வழக்கறிஞரிடம் நீதிபதிகள் கேட்டார். இதற்கு பதிலளித்த விஷால் தரப்பு மூத்த வழக்கறிஞர் ஏ.கே.ஸ்ரீராம், 15 கோடி ரூபாய் கடன் பெற்ற நிலையில், ஆண்டிற்கு 30 சதவீத வட்டியுடன் திரும்பச் செலுத்த பிறப்பித்த உத்தரவு சட்டவிரோதமாகும். வட்டித் தொகை மட்டும் 40 கோடி ரூபாய்க்கு மேல் வருகிறது. லைகா நிறுவனம் கூறுவது போல, விஷால் பெரிய பணக்காரர் இல்லை என்றார்.

அப்போது, குறுக்கிட்ட நீதிபதிகள், அப்படியானால் திவாலானவர் என அறிவிக்கத் தயாராக இருக்கிறீர்களா?. 30 சதவீத வட்டி என்பது மிக அதிகம். இப்படி சுரண்டப்படுவதை அனுமதிக்க முடியாது என்று நீதிபதிகள் கூறினர்.

இதையடுத்து, லைகா நிறுவனத்திடம் பெற்ற கடனை வட்டியுடன் செலுத்த வேண்டுமென்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்த நீதிபதிகள், 10 கோடி ரூபாயை டெபாசிட் செய்யுமாறு விஷால் தரப்புக்கு உத்தரவிட்டனர்.

மேலும், இந்த மனுவுக்கு லைகா நிறுவனம் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை 4 வாரங்களுக்குத் தள்ளிவைத்தனர்.

Related Posts