சினிமா செய்திகள்

இளையராஜா அண்ணன் மகன் நாயகனாகிறார் – விவரங்கள்

இளையராஜா குடும்பத்திலிருந்து அவரது சகோதரர் கங்கை அமரன், ஆர்.டி.பாஸ்கர்,அவருடைய மகன்கள் கார்த்திக் ராஜா,யுவன் ஷங்கர் ராஜா,சகோதரர்களின் வாரிசுகளான வெங்கட்பிரபு,பிரேம்ஜி,வாசுகி பாஸ்கர் என ஏராளமானோர் திரைத்துறையில் இருக்கின்றனர்.அண்மையில் இளையராஜாவின் பேரன், யத்தீஸ்வர் ராஜா இசையமைப்பாளராக அறிமுகமாகி தன்னுடைய முதல் பாடலை வெளியிட்டுள்ளார்.

அந்த வரிசையில் இப்போது புதிதாக ஒருவர் இணைகிறார்.

இளையராஜாவின் அண்ணன் ஆர்.டி.பாஸ்கர்.அவர் திரைப்படத் தயாரிப்பாளராக இருந்தவர்.பாவலர் கிரியேசன்ஸ் நிறுவனத்தின் பெயரில் தயாரிக்கப்பட்ட படங்களில் தயாரிப்பு என்று அவருடைய பெயர்தான் வரும். அவருக்கு ஒரு மகள், இரண்டு மகன்கள்.மகள் வாசுகி பாஸ்கர் ஆடைவடிவமைப்பாளராக இருக்கிறார்.நிறையப் படங்களில் பணியாற்றியிருக்கிறார்.பணியாற்றிக் கொண்டுமிருக்கிறார்.

ஒரு மகன் பார்த்தி பாஸ்கர் திரைப்பட இயக்குநர்.பம்பரக் கண்ணாலே உள்ளிட்ட படங்களை இயக்கியிருக்கிறார்.அவருடைய இன்னொரு மகன் பெயர் ஜெயன் பாஸ்கர். அவர்தான் இப்போது ஒரு படத்தில் கதாநாயகனாக நடிக்கவிருக்கிறார்.

அவர் கதாநாயகனாக நடிக்கிறார் என்பதால் அவருக்கு ஒட்டுமொத்த குடும்பமும் உதவியாகக் களமிறங்குகிறது.அந்தப்படத்துக்குக் கதை திரைக்கதை வசனம் எழுதுகிறார் வெங்கட்பிரபு. யுவன் ஷ்ங்கர் ராஜா இசையமைக்கிறார்.ஆடை வடிவமைப்பாளராக வாசுகி பாஸ்கர் இருப்பார் என்று எண்ணினால் அது தவறு.இந்தப்படத்துக்கு பூர்ணிமா ராமசாமி ஆடை வடிவமைப்பு செய்யவிருக்கிறார்.

இந்தப்படத்தை அண்மையில் வெளியான யெல்லோ படத்தை இயக்கிய வைபவ் முருகேசன் இயக்கவிருக்கிறார்.

இளையராஜாவின் பங்களிப்பும் படத்தில் இருக்கிறது.எப்படியெனில்? இந்தப்படத்தின் பெயர் ராஜா ப்ளே லிஸ்ட்.

படத்தின் பெயரே இளையராஜா பாடல்கள் என்றிருப்பதால், இந்தப்படத்தில் இளையராஜா பாடல்களும் பெரும்பங்கு வகிக்கும் என்பதில் மாற்றமில்லை.அதற்காக வழக்கெல்லாம் போடமாட்டார்.ஏனெனில் அவருடைய ஆசியுடன் தான் இந்தப் படம் தொடங்குகிறது.இந்தப் படத்தைத் தயாரிப்பவர்களும் இளையராஜா மூலமே இந்தத் துறைக்குள் வந்திருக்கிறார்கள். அவருக்காகவே அவருடைய அண்ணன் மகனை கதாநாயகனாக வைத்துப் படம் தயாரிக்கிறார்கள்.

விரைவில் இந்தப்படத்தின் அறிவிப்பு வெளியாகவிருக்கிறது.

ஒரு புதிய கதாநாயகன் படமென்று பத்தோடு பதினொன்றாகக் கடந்து போகமுடியாதபடி யுவன் ஷ்ங்கர் ராஜா,வெங்கட்பிரபு ஆகியோர் இந்தப்படத்துக்குள் வந்திருப்பதால் அறிவிக்கும்போதே பெரும் கவனத்தை ஈர்க்கக்கூடிய படமாக இது இருக்கும் என்று சொல்கிறார்கள்.

இளையராஜா குடும்பத்தினர் பல்வேறு துறைகளில் புகழ்பெற்றிருந்தாலும் புகழ்பெற்ற கதாநாயகன் அந்தக் குடும்பத்தில் இல்லை.அந்தக் குறையை ஜெயன் பாஸ்கர் தீர்த்துவிடுவார் என்று நம்பப்படுகிறது.

Related Posts