சினிமா செய்திகள்

பணம் ஈழத் தமிழரின் இரத்தத்தைவிட வலியதா விஜயசேதுபதி?

இலங்கை மட்டைப்பந்தாட்ட அணியின் முன்னணி வீரராக இருந்து ஓய்வு பெற்றவர் முத்தையா முரளிதரன். இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழர்.

முத்தையா முரளிதரன் வாழ்க்கைக் கதையில் நாயகனாக நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தமானார்.

முத்தையா முரளிதரன் தமிழினப்படுகொலைக் குற்றவாளிகளான இராஜபக்சே சகோதரர்களுக்கு ஆதரவாகத் தேர்தல் பரப்புரை செய்தவர். அதோடு, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சமாதான பேச்சுவார்த்தைகளின் போது பல வாய்ப்புகள் கொடுக்கப்பட்டது. ஆனால் அவர்கள் அப்பாவி மக்களைப் படுகொலை செய்தனர். விடுதலைப் புலிகள் அமைப்பு அழிக்கப்பட்ட அன்றுதான் மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்தேன் என்றெல்லாம் பேசியவர்.

இதனால் உலகத்தமிழர்களின் கடும் வெறுப்புக்கு ஆளாகியுள்ளார். அவருடைய வாழ்க்கைக் கதையில் எப்படி விஜய் சேதுபதி நடிக்கலாம் என்று கேள்விகள் எழுப்பினர். ஆனால், முத்தையா முரளிதரனாக நடித்தே தீருவது என்று விஜய் சேதுபதி உறுதியாக உள்ளார்.

அப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அக்டோபர் 8,2020 அன்று வெளியிடப்பட்டது.

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் முத்தையா முரளிதரன் 800 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஆகையால், இந்தப் படத்துக்கு ‘800’ என பெயரிட்டுள்ளனர். ‘கனிமொழி’ படத்தை இயக்கிய எம்.எஸ்.ஸ்ரீபதி இயக்கவுள்ள இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக ஆர்.டி.ராஜசேகர், இசையமைப்பாளராக சாம் சி.எஸ் ஆகியோர் பணிபுரியவுள்ளதாக்ச் சொல்லப்படுகிறது.

இந்த அறிவிப்பு வெளியானதும், ஈழத்துக் கவிஞரும் ஆடுகளம் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்திருப்பவருமான வ.ஐ.ச.ஜெயபாலன் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

அவர் வெளீயிட்டுள்ள பதிவில்…

VIJAY SETHUPATHI, IS MONEY IS THICKER THAN ILANKAI TAMIL’S BLOOD?

பணம் ஈழத் தமிழரின் இரத்தத்தைவிட வலியதா விஜய சேதுபதி?

இறுதி ஈழப்போரில் நிகழ்ந்த கொலைகளையும் பாலியல் வன்முறைகளையும் நியாயப்படுத்தாமல் முரளீதரன் கண்டித்தால், நண்பர்களான இலங்கை சிங்கள அரசின் சீனசார்பு சக்திகள் தமிழகத்தில் ஊடுருவும் ஆபத்தில்லை என்பதை உறுதிப்படுத்தினால் படம் நடிப்பதுதொடர்பாக யாருக்கும் ஆட்சேபனை இல்லை.

இவ்வாறு தெரிவித்துள்ளார் வ.ஐ.ச.ஜெயபாலன்.

அவருடைய இந்தப்பதிவு,இந்தப் படத்தின் மூலம் தமிழகத்துக்குள் சிங்கள அரசின் ஊடுருவல் இருக்கும் என்றிருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Posts