நடிகர் சூரியிடம் பணமோசடி செய்ததாக விஷ்ணுவிஷால் அப்பா மீது வழக்கு – விஷ்ணுவிஷால் விளக்கம்
நடிகர் விஷ்ணு விஷாலுடன் வீர தீர சூரன் என்ற படத்தில் நடிகர் சூரி நடித்தபோது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது தன்னுடைய தந்தையான அப்போதைய டிஜிபி ரமேஷ் குடவாலாவை சூரிக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார் விஷ்ணு விஷால்.
இதனிடையே நிலம் வாங்க விரும்பிய சூரிக்கு, சிறுசேரியில் உள்ள நிலத்தை வாங்கித் தருவதாக கூறிய ரமேஷ் குடவாலா, இதற்காக சூரியிடம் 3 கோடியே 10 இலட்ச ரூபாய் பணத்தைப் பெற்றுள்ளார்.
ரமேஷ் குடவாலா தயாரிப்பில் தான் நடித்த படத்திற்கான சம்பளத்தில் 40 இலட்ச ரூபாய் ஏற்கனவே உள்ள நிலையில் கூடுதலாகப் பணத்தைக் கொடுத்துள்ளார் சூரி. ஆனால் அந்த நிலத்தின் மதிப்பைக் கூடுதலாகக் காட்டி போலி ஆவணங்களைத் தயார் செய்து அதை சூரிக்கு விற்றிருக்கிறார் ரமேஷ் குடவாலா.
ஆனால் அந்த சொத்து வில்லங்கமானது என தெரியவரவே, அதை மீண்டும் அவரிடமே ஒப்படைத்துவிட்டாராம் சூரி. ஆனாலும் ரமேஷ்குடவாலா வாங்கிய பணத்தைத் திருப்பி தராமல் இருக்கவே, காவல் நிலையத்தில் சென்று புகார் அளித்துள்ளார் சூரி.
ரமேஷ் குடவாலா முன்னாள் டிஜிபி என்பதால் அவர் மீது புகார் பதிவு செய்யவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனிடையே 40 இலட்ச ரூபாய் பணம் மட்டும் வழங்கப்பட்ட நிலையில் மீதமுள்ள 2 கோடியே 70 இலட்ச ரூபாய் பணத்தை மோசடி செய்ததாக ரமேஷ் குடவாலா மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சூரி மனு அளித்தார். இதன்பேரில் இருவர் மீதும் 5 பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இச்செய்தி வெளியானவுடன் நடிகர் விஷ்ணுவிஷால் அளித்துள்ள விளக்கத்தில்…..
என் மீதும் என் தந்தை மீதும் வைக்கப்பட்டுள்ள பொய்யான குற்றச்சாட்டுகளைப் பற்றிப் படித்தது மிகவும் அதிர்ச்சிகரமாகவும் வருத்தமாகவும் இருந்தது. சிலர் உள்நோக்கத்துடன் செயல்படுவது கண்கூடாகத் தெரிகிறது. உண்மையில் திரு.சூரி, விஷ்ணுவிஷால் ஸ்டுடியோஸுக்கு ஒரு அட்வான்ஸ் படத்தைத் திரும்பத் தரவேண்டும்.கவரிமான் பரம்பரை என்ற படத்துக்காக 2017 ஆம் ஆண்டு கொடுக்கப்பட்ட பணம் அது. சில் தவிர்க்க முடியாத காரணங்களால் அப்படம் கைவிடப்பட்டது.
சட்டத்தின் மீதும் நீதித்துறையின் மீதும் எங்களுக்கு முழுநம்பிக்கை உள்ளது.இந்த நேரத்தில் இதுபற்றி இன்னும் விரிவாகப் பேசுவது சரியாக இருக்காது. நாங்கள் சட்டம் அனுமதிக்கும் பாதையில் செல்வோம்.
உண்மை வரும்வரை இரசிகர்களும் நலவிரும்பிகளும் காத்திருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். மேலும் உண்மையான தகவல்களுடன் இதுபற்றி செய்தி வெளியிடவேண்டுமென்று ஊடகங்களிடம் கேட்டுக்கொள்கிறேன். எல்லாம் சரியான பிறகு சட்டப்படி சரியான நடவடிக்கையை நான் எடுப்பேன்.
இவ்வாறு விஷ்ணுவிஷால் கூறியுள்ளார்.











