சினிமா செய்திகள்

மீண்டு(ம்) வருகிறது தேனாண்டாள் ஃபிலிம்ஸ்

தமிழ்த்திரையுலகில் மிகப்பெரும் தயாரிப்பு நிறுவனமாகத் திகழ்பவைகளில் ஒன்று தேனாண்டாள் ஃபிலிம்ஸ். அந்நிறுவனம் 2017 இல் விஜய் நடித்த மெர்சல் படத்தைத் தயாரித்து வெளியிட்டது.அப்படம் பெரிய வசூலைப் பெற்றது என்றாலும் தயாரிப்பு நிறுவனத்துக்குப் பொருட்ச் சிக்கலை ஏற்படுத்தியது.

அதன்விளைவாக, அந்நிறுவனம் சுந்தர்.சி இயக்கத்தில் பெரும்பொருட்செலவில் தயாரிப்பதாகத் திட்டமிட்டிருந்த சங்கமித்ரா படம் கைவிடப்பட்டது. தனுஷ் இயக்கத்தில் பாதிவரை படப்பிடிப்பு நடந்த படமும் நிறுத்தப்பட்டது.முழுமையாகத் தயாரான இறவாக்காலம் படம் வெளியாகாமல் இருக்கிறது.

இந்நிலையில் அந்நிறுவனம் தற்போது மீண்டெழவிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

தேனாண்டாள் நிறுவனம் தயாரிப்பதாக இருந்த சங்கமித்ரா படத்துக்கு முன் செலவு பல கோடி ரூபாய் ஆனது என்றார்கள்.அப்படம் கைவிடப்பட்டதால் அப்பணமும் அப்படியே கிடந்தது.

இப்போது சங்கமித்ரா படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவிருப்பதாக முடிவாகியிருக்கிறது. அதனால் அப்படத்துக்காக தேனாண்டாள் நிறுவனம் செலவு செய்த தொகையை லைகா நிறுவனம் கொடுத்துவிடுவதாகச் சொல்லியிருக்கிறதாம்.

அப்பணத்தை வைத்து நின்று போன தனுஷ் படத்தைத் தொடங்க அந்நிறுவனம் முடிவெடுத்திருக்கிறது.

தனுஷிடம் இதுபற்றிப் பேசியதற்கு அவரும் ஒப்புக்கொண்டார் என்று சொல்கிறார்கள்.

தனுஷ் இயக்கும் அந்தப்படத்தின் படப்பிடிப்பு சுமார் நாற்பது நாட்கள் வரை நடந்துள்ளது. இப்போது அதை மீண்டும் தொடர தனுஷ் முன்வந்திருக்கிறார்.

ஒரு குறிப்பிட்ட தொகையைக் கொடுங்கள் படத்தை முடித்துக் கொடுத்துவிடுகிறேன் என்று உறுதியளித்திருக்கிறார். இதனால் தேனாண்டாள் நிறுவனம் மீண்டும் பயணத்தைத் தொடங்கவிருக்கிறது என்கிறார்கள்.

நல்லது.

Related Posts