விமான நிலையம் வரை போய்த் திரும்பிய மணிரத்னம் – பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு இரத்தானது ஏன்?
மணிரத்னம் இயக்கும் பொன்னியின்செல்வன் படத்தின் படப்பிடிப்பு இன்னும் முழுமையடையவில்லை.
படத்தின் காட்சிகள் எடுக்கப்பட்டுவிட்டன என்றாலும் படத்தின் தொடக்கத்தில் இடம்பெறவிருக்கும் பாடல் ஒன்று எடுக்கவேண்டியிருக்கிறதாம்.
இதற்காக, பொள்ளாச்சி பகுதிகளில் மூன்று நாட்களும் அதன்பின் மைசூர் பகுதிகளில் இரண்டு நாட்களும் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிட்டாராம் மணிரத்னம்.
இதற்காக, தொழில்நுட்பக் கலைஞர்கள் நடனக்கலைஞர்கள் உட்பட ஏராளமானோரை பொள்ளாச்சிக்கு அனுப்பிவிட்டு, கடைசியாக மணிரத்னமும் கிளம்பியிருக்கிறார்.
சென்னை விமான நிலையம் வரை போனவர், அங்கிருந்து திரும்பி வீட்டுக்கு வந்துவிட்டாராம். வந்தவுடன் படப்பிடிப்பு இல்லை, போனவர்கள் திரும்பட்டும் போகிறவர்களைத் தடுத்து நிறுத்துங்கள் என்று சொல்லிவிட்டாராம்.
இதனால்,ஏற்கனவே அங்கு போய் முன் தயாரிப்புப் பணியில் இருந்த பலரை திரும்ப வரச்சொல்லிவிட்டு கடைசிநேரத்தில் புறப்பட்டுக் கொண்டிருந்த பலரின் பயணச்சீட்டுகளை அவசர அவசரமாக இரத்து செய்திருக்கிறார்கள்.
எனவே, இன்றுமுதல் பொள்ளாச்சிப் பகுதியில் தொடங்க வேண்டிய படப்பிடிப்பு தொடங்கவில்லை.
அந்தப்பாடல் காட்சி படமாக்கப்படுமா? அல்லது இருக்கிற காட்சிகளின் மீதே பாடலை ஓடவிடுவார்களா? என்பது படக்குழுவினருக்கே புரியவில்லையாம்.
எல்லாம் மணிரத்னத்துக்கே வெளிச்சம்.











