சினிமா செய்திகள்

ஷங்கரை விடாமல் துரத்தும் லைகா – ஐதராபாத்திலும் வழக்கு

கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படம் தயாராகி வந்தது.

இப்படம் தொடர்பாக தயாரிப்பு நிறுவனத்துக்கும் இயக்குநர் ஷங்கருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் படவேலைகள் முடங்கியுள்ஏன.

இதனால், தெலுங்கில் ஒரு படம், இந்தியில் ஒரு படம் ஆகியனவற்றை ஒப்புக்கொண்டு அந்த வேலைகளில் ஈடுபட்டுவருகிறார் ஷங்கர்.

இந்நிலையில், இந்தியன் 2 படத்தை முடித்துக் கொடுக்காமல் வேறு படங்களை இயக்க ஷங்கருக்கு தடை விதிக்கக் கோரி, லைகா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்மில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கில் ஷங்கர் தரப்பு விளக்கத்தைக் கேட்காமல் தடை உத்தரவு பிறப்பிக்க முடியாது என தனி நீதிபதி மறுத்து விட்டார்.

இதை எதிர்த்து லைகா தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது ஷங்கர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ள போது, ஐதராபாத் நீதிமன்றத்தில் இதே கோரிக்கையுடன் வழக்கு தொடர்ந்துள்ளதாக லைகா நிறுவனத்தின் மீது புகார் கூறினார்.

மேலும், தனி நீதிபதி முன் நிலுவையில் உள்ள வழக்கை தள்ளிவைக்க லைகா தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து, தனி நீதிபதி முன் நிலுவையில் உள்ள தடை கோரிய மனு மீது தீர்வு கண்ட பின், மேல் முறையீட்டு வழக்கை விசாரணைக்கு எடுக்கலாம் என்று கூறி, இந்த மேல் முறையீட்டு வழக்கின் விசாரணையை தலைமை நீதிபதி அமர்வு, மூன்று வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.

இது ஷங்கருக்கு தற்காலிக நிம்மதி என்றாலும் ஐதராபாத் நீதிமன்றத்தில் என்ன சொல்லப்போகிறார்களோ? என்கிற அச்சமும் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

Related Posts