க்யூப் சினிமா நிறுவனம் கைமாறியது – திரையுலகுக்கு நல்லது நடக்குமா?
தமிழகத்தில் தற்போது ஏறக்குறைய ஆயிரத்து நூறு திரையரங்குகள் இயங்கி வருகின்றன.
2000 ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்தே படச்சுருள்கள் மூலம் திரையிடக்கூடிய பழைய புரொஜெக்டர்களுக்குப் பதிலாக டிஜிட்டல் முறையில் படங்களை ஹார்ட் டிஸ்க்கிலிருந்து திரையிடும் புரொஜெக்டர்கள் அறிமுகமாகின.
இவ்வாறு படங்களைத் திரையிடும் சில நிறுவனங்களில் முன்னணியில் இருக்கும் நிறுவனம் க்யூப் சினிமா நிறுவனம்.
இந்நிறுவனத்தைத் தொடங்கி நடத்திக் கொண்டிருந்தவர் ஜெயேந்திரா.
இவர், சித்தார்த் நடித்த 180 உள்ளிட்ட சில படங்களை இயக்கியவர்.
இவர் தலைமையில் சிறப்பாக இயங்கிக் கொண்டிருந்த இந்நிறுவனம் இப்போது கை மாறிவிட்டதாம்.
சென்னையில் புகழ்பெற்ற சத்யம் சினிமாஸ் நிறுவனம், தாம் நடத்தி வந்த சத்யம் திரையரங்குகளை பிவிஆர் நிறுவனத்திடம் விற்றுவிட்டது.
அந்நிறுவனத்தை நடத்தி வந்த ஸ்வரூப் ரெட்டி மற்றும் கிரண்ரெட்டி ஆகியோர்தாம் இப்போது க்யூப் சினிமா நிறுவனத்தைக் கைப்பற்றியிருக்கிறார்களாம்.
அந்நிறுவனத்தின் 59 விழுக்காடு பங்குகளை அவர்கள் பெற்றிருக்கிறார்களாம்.
அதனால் அவர்கள்தாம் முதன்மை உரிமையாளர்கள் என்றாலும் 41 விழுக்காடு பங்குகள் மற்றோரிடம் இருக்கின்றன.
அவற்றில் அதிகமானவற்றைக் கையில் வைத்திருக்கும் ஜெயேந்திரா குழுவினரே தொடர்ந்து நிர்வாகத்தைக் கவனிக்கிறார்களாம்.
திரையரங்குகள் நடத்தியவர்கள் க்யூப் சினிமாவை வாங்கியிருப்பதால் திரையுலகுக்கு நன்மை நடக்கும் என்று சிலர் நம்புகிறார்கள்.
என்ன நடக்கிறதெனப் பார்ப்போம்.











