சினிமா செய்திகள்

சூர்யா 40 – அடுத்தகட்டப் படப்பிடிப்பு எங்கே? எப்போது?

சூர்யா நடிக்கும் புதியபடத்தை பாண்டிராஜ் இயக்குகிறார். சூர்யா 40 என்று அழைக்கப்படும் இந்தப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தில் நாயகியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார்.

படத்தின் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் சத்யராஜ் நடிக்கிறார். சூர்யா – சத்யராஜ் இருவரும் இணைந்து நடிக்கும் முதல் படமாக இது அமைந்துள்ளது.

இப்படத்துக்கு ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார். இசையமைப்பாளராக இமான் பணிபுரிகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 15 ஆம் தேதி சென்னையில் தொடங்கியது.அப்போது நாயகன் சூர்யா படப்பிடிப்பில் கலந்துகொள்ளவில்லை.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஓய்வெடுத்துக் கொண்டிருந்ததால் அவர் படப்பிடிப்பில் கலந்துகொள்ளவில்லை.

ஒருவாரம் மட்டும் முதல்கட்டப் படப்பிடிப்பு நடந்தது.

அதன்பின், மார்ச் 13 மீண்டும் அப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. அப்போது சூர்யா படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறார். அவரை வைத்து சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டனவாம்.

தொடர்ந்து நடந்த படப்பிடிப்பு கொரோனாவால் தடைபட்டது.

இந்நிலையில், இயக்குநர் பாண்டிராஜ் ஜூன் 7 அன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். இதனை முன்னிட்டு திரைத்துறை பிரபலங்கள், இரசிகர்கள் எனப் பலரும் அவருக்குப் பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்தனர்.

தனக்கு வாழ்த்துத் தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள பாண்டிராஜ், ‘சூர்யா 40’ படம் பற்றியும்பேசியிருந்தார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “35% படம் முடிந்துள்ளது. எடுத்தவரைக்கும் நன்றாக வந்துள்ளது. அடுத்தகட்ட படப்பிடிப்பு ஊரடங்கு முடிந்ததும் தொடங்கப்படும். எங்கள் குழுவினர் அதற்கு தயாராக உள்ளனர். படத்தின் தலைப்பு முறையான அறிவிப்போடு வெளியாகும். ஜூலைவரை எங்களுக்கு நேரம் அளியுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் சொன்னதுபோல காரைக்குடியில் ஒரு மிகப்பெரிய வீட்டை எடுத்து அதற்குள் பெரும்பகுதிப் படப்பிடிப்பை நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்களாம்.

அவ்வீடு தவிர சுற்றுப்புறங்களிலும் படப்பிடிப்பு நடத்தப்படுமாம்.

படத்தின் கதைக்களம் ஒரு நடுத்தரமான நகரம் என்பதால் அதற்கு காரைக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்கள் சரியாக இருக்கும் என்பதால் அங்கே செல்லவிருக்கிறார்களாம்.

தமிழ்நாடு அரசு, படப்பிடிப்புகள் நடத்தலாம் என்று சொன்னால் அடுத்தநாளே கிளம்பத் தயாராக இருக்கிறது படக்குழு.

Related Posts