சினிமா செய்திகள்

பிரபுதேவா படத்துக்கு விடிவுகாலம்

பிரபுதேவா நடிப்பில் தயாராகியிருக்கும் படம் பொன்மாணிக்கவேல்.இப்படத்தில் பிரபுதேவா, முதன்முறையாகக் காவல் துறை அதிகாரி வேடத்தில் நடிக்கிறார்.அவரிடம் பல படங்களில் உதவியாளராகப் பணியாற்றிய ஏ.சி.முகில்செல்லப்பன் இயக்குகிறார். நேமிசந்த் ஜபக் தயாரிக்கிறார்.

இந்தப் படத்தில் நிவேதா பெத்துராஜ் கதாநாயகியாக நடிக்கிறார். சுரேஷ் மேனன், பிரபு, கு.ஞானசம்பந்தன், மகேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

டி.இமான் இசையமைக்கும் இந்தப் படத்தில் சதுரங்க வேட்டை படத்துக்கு ஒளிப்பதிவு செய்த கே.ஜி.வெங்கடேஷ் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியுள்ளார். தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் பணியாற்றிய டி.சிவானந்தீஸ்வரன் படத்தொகுப்பு பணிகளைக் கவனிக்கிறார்.

இந்தப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்து படம் வெளியீட்டுக்குத் தயாராகி வருடக்கணக்காகிவிட்டது.

பல சிக்கல்களைத் தாண்டி அப்படம் வெளியாகும் என்று சொல்லப்பட்ட நேரத்தில் கொரோனா சிக்கல் வந்துவிட்டது.

இந்நிலையில், அந்தப்படத்தை நேரடியாக இணையத்தில் வெளியிட சோனி லிவ் நிறுவனம் முன் வந்திருக்கிறதாம்.

அது தொடர்பான பேச்சுகள் நிறைவடைந்துவிட்டதென்றும் விரைவில் அறிவிப்பு வரலாம் என்றும் சொல்கின்றனர்.

இதனால், ஆண்டுக்கணக்கில் இழுத்துக்கொண்டிருந்த படத்துக்கு விடிவு காலம் வந்துவிட்டதெனப் படக்குழுவினர் மகிழ்ச்சி அடைகின்றனர்.

Related Posts