கார்த்தி ஒப்புக்கொண்டுள்ள புதிய படம் – இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் விவரம்
நடிகர் கார்த்தி இப்போது மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன், முத்தையா இயக்கியுள்ள விருமன் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார்.
அவற்றிற்கடுத்து பி.எஸ்.மித்ரன் இயக்கும் சர்தார் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் லட்சுமண் தயாரிக்கிறார்.
இதற்கடுத்து ராஜுமுருகன் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவிருக்கிறார். அப்படத்தை ட்ரீம்வாரியர் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்நிலையில், புதிய படமொன்றில் நடிக்க கார்த்தி ஒப்புக்கொண்டிருக்கிறாராம்.
ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த கனா, உதயநிதி நடித்திருக்கும் நெஞ்சுக்கு நீதி ஆகிய படங்களை இயக்கிய அருண்ராஜா காமராஜ் சொன்ன ஒரு கதை கார்த்திக்குப் பிடித்திருக்கிறதாம். அதனால் அவர் இயக்கத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறாராம்.
கார்த்தி அருண்ராஜா காமராஜ் ஆகியோர் இணையும் இந்தப்படத்தை இப்போது சர்தார் படத்தைத் தயாரித்துக் கொண்டிருக்கும் பிரின்ஸ் பிக்சர்ஸ் லட்சுமணே தயாரிக்கவிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.
இதற்கான பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்துவிட்டதாகவும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் சொல்லப்படுகிறது.











