தேவயானியின் இரண்டு மகள்களும் நாயகியாகிறார்கள் – விவரம்

நடிகை தேவயானி இயக்குநர் ராஜகுமாரன் தம்பதியர்க்கு இரண்டு மகள்கள். மூத்தவர் இனியா.இளையவர் பிரியங்கா.இவர்களில் இனியா கல்லூரி இறுதியாண்டும் பிரியங்கா கல்லூரியில் முதலாண்டும் படித்துவருகிறார்கள்.
இந்நிலையில் இனியா,தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாடல்பாடும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பாட்டுப்பாடி வருகிறார்.அதில் பெரும் வரவேற்பையும் பெற்றுவருகிறார்.
அதோடு, அவர் ஒரு படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்று செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.
நடிகரும் இயக்குநருமான தியாகராஜன், தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற கோர்ட் படத்தின் தமிழாக்க உரிமையைப் பெற்றிருக்கிறார் என்றும் அப்படத்தின் தமிழாக்கத்தில்தான் இனியா கதாநாயகியாக நடிக்கிறார் என்று செய்திகள் வருகின்றன.
இதில் ஒருபாதிதான் சரி என்றும் இன்னொரு பாதி தப்பு என்றும் விவரமறிந்தவர்கள் சொல்கிறார்கள்.
மூத்தமகள் இனியா, ஒரு படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருக்கின்றன என்பது சரி ஆனால் அந்தப்படம் தியாகராஜன் இயக்கும் படம் என்பது தப்பு என்கிறார்கள்.
ஒரு புதுஇயக்குநரின் படத்தின் கதை, ஒரு தாத்தாவையும் பேத்தியையும் மையப்படுத்தி எழுதப்பட்டிருக்கிறதாம்.அந்தக் கதையில் தாத்தாவாக இயக்குநர் கஸ்தூரிராஜா நடிக்கிறார் என்றும் அப்படத்தில் அவருக்குப் பேத்தியாக இனியா நடிக்கவிருக்கிறார் என்றும் சொல்கிறார்கள்.
அப்படியானால் தியாகராஜன் படத்தில் நடிக்கப்போவது யார்? என்று கேட்டால் கிடைக்கும் விடை வியப்பானது.
தேவயானியின் இளைய மகள் பிரியங்காதான் தியாகராஜன் இயக்கும் படத்தில் நாயகியாக நடிக்க ஒப்ப்ந்தம் செய்யப்பட்டிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.இளையமகளும் நடிக்க வருகிறார் என்பது தெரியாமல், தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற இனியாதான் இந்தப்படத்தில் நடிக்கப்போகிறார் என்று தவறாகச் சொல்லிக்கொண்டிருக்கிறார்களாம்.
இருவரையும் நடிக்க வைப்பதில் பெற்றோருக்கு முதலில் சம்மதம் இல்லையாம்.அதன்பின் சம்பந்தப்பட்டவர்கள் படத்தின் கதை அதில் இவர்களுக்கான முக்கியத்துவம் ஆகியனவற்றை விளக்கிச் சொன்னதால் ஒப்புக்கொண்டார்களாம்.
இருவருடைய கல்வியும் பாதிக்காத வண்ணம் படப்பிடிப்பு மற்றும் படவேலைகளை வைத்துக் கொள்வதாக சம்பந்தப்பட்டவர்கள் சொல்லியிருக்கிறார்கள் என்பதும், திரையுலகில் மூத்தவர்களும் பெரும் அனுபவசாலிகளுமான கஸ்தூரிராஜா மற்றும் தியாகராஜன் ஆகியோர் படங்களில் மகள்கள் அறிமுகமாவது அவர்களுடைய எதிர்காலத்துக்கு நன்மை பயக்கத்தக்கதாக இருக்கும் என்றும் தேவயானி தம்பதியினர் நினைக்கிறார்களாம்.
நினைத்தது நடக்கட்டும்,எண்ணியது ஈடேறட்டும்.
ஒரேநேரத்தில் தமிழ்த்திரையுலகுக்கு இரண்டு புதியநாயகிகள் கிடைக்கவிருக்கிறார்கள் என்பது இரசிகர்களுக்கான செய்தி.