அறுபது கோடிக்குக் கையெழுத்து போட்ட சூர்யா – கருப்பு வெளியானது
சூர்யா,திரிஷா,யோகிபாபு,இந்திரன்ஸ்,ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்டோர் நடிப்பில்,ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கருப்பு’.
இப்படத்தில்,நட்டி நட்ராஜ்,சுவாசிகா,ஷிவதா,அனகா மாயா ரவி,சுப்ரீத் ரெட்டி,மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்திருக்கிறார்.
ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்தப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள்
எஸ்.ஆர்.பிரபு மற்றும் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
இந்தப்படம்,மே 14,2026 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.அதையொட்டி,காலை ஒன்பது மணி சிறப்புக்காட்சிக்கு அரசாங்கத்திடம் அனுமதி பெற்றிருந்தார்கள்.
ஆனால்,திட்டமிட்டபடி படம் வெளியாகவில்லை.
நேற்று காலை ஒன்பது மணிக்காட்சி வெளியாகாது மதியம் வெளியாகிவிடும் என்றார்கள்.மதியமும் ஆகவில்லை,மாலை வெளியாகிவிடும் என்றார்கள்.அப்போதும் ஆகவில்லை.
இந்நிலையில்,இன்று காலை ஒன்பது மணிக்குப் படம் வெளியாகிவிட்டது.
என்ன நடந்தது?
நேற்று படம் வெளியாகாததற்குக் காரணம், படத்தயாரிப்புக்காக வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாததும் இப்படத் தயாரிப்பு நிறுவனத்துக்கு ஏற்கெனவே இருந்த கடன்களும்தாம் என்று சொல்லப்பட்டது.
இதனால், ஒவ்வொரு கடனாகப் பேசி சரிசெய்யும் வேலையில் தயாரிப்பு நிறுவனம் இறங்கியது.சிலருக்கு வட்டி மட்டும் கட்டுவது சிலருக்கு அசலைத் தருவது என்று பேசி சரிசெய்து வந்தார்களாம்.
அந்தவரிசையில் படத்துக்கு நெகட்டிவ் ரைட்ஸுக்காக கொடுத்த தொகை மற்றும் அதற்கான வட்டி ஆகிய அனைத்தும் சேர்ந்து சுமார் எண்பத்தைந்து கோடி இருந்திருக்கிறது.அதில் சுமார் பதினைந்து கோடியை மட்டும் தயாரிப்பு நிறுவனத்தால் கொடுக்க முடிந்தது என்று சொல்லப்படுகிறது.
கடைசியாக,படத்தின் நாயகன் சூர்யா,சுமார் அறுபது கோடிக்கு நான் பொறுப்பு என்று சொல்லி கையெழுத்துப் போட்டார் என்று சொல்லப்படுகிறது.
அதன்பின்னும் சுமார் பதினைந்து கோடி கடன் பாக்கியிருந்தது என்றும் அதை பிறகு வாங்கிக் கொள்கிறேன் என்று நிதியாளர் விட்டுக் கொடுத்ததாகவும் சொல்லப்படுகிறது.
அதன் விளைவாகத்தான் இன்று படம் வெளியானது என்று சொல்கிறார்கள்.
இதில்,நாயகன் சூர்யாவுக்குக் கொடுக்கப்பட்ட சம்பளத்தைவிட அதிகமாகப் பொறுப்பெடுத்துக் கொண்டிருக்கிறார் என்பதால் அவருக்கு திரையுலகில் பாராட்டுகள் குவிந்து கொண்டிருக்கின்றன.
அதேசமயம், தயாரிப்பு நிறுவனங்கள் செய்யும் தவறுகளுக்கெல்லாம் கதாநாயகன் பொறுப்பெடுக்க வேண்டும் என்பது சரியான நடைமுறை அல்ல என்றும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.










