சினிமா செய்திகள்

மீண்டும் தள்ளிப்போகிறது சேயோன் படப்பிடிப்பு – காரணம் என்ன?

தாய்க் கிழவி படத்தை இயக்கிய சிவகுமார் முருகேசன் எழுதி இயக்கும் படம் சேயோன்.இது சிவகார்த்திகேயனின் 26 ஆவது படம்.
இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார்.

இதன் முதல்பார்வை பிப்ரவரி 16,2026 அன்று வெளியிடப்பட்டது.பிப்ரவரி 17 சிவகார்த்திகேயன் பிறந்தநாளன்று இப்படம் குறித்த அறிமுகக் காணொலி ஒன்றும் வெளியிடப்பட்டது.அதில்,இப்படம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்திலேயே வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

சிவகார்த்திகேயன் நடித்த அமரன் படத்துக்குப் பிறகு மீண்டும் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மரிக் மீடியா, ஆர்.மகேந்திரன் ஆகியோர் இப்படத்தைத் தயாரிக்கிறார்கள்.

கிராமியப் பின்னணியில் நமது மண் சார்ந்த உணர்வுகளுடன் அதிரடிக் காட்சிகள், பாடல்கள் என்று, குடும்பத்திலுள்ள அனைவரும் இரசிக்கும்படியான படமாக சேயோன் உருவாகிறது என்று சொல்லியிருக்கிறார்கள்.

சேயோன் பட அறிவிப்பு வெளியானபோதே, இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் இறுதியில் தொடங்கும் என்று சொல்லியிருந்தார்கள்.அதன்படி மார்ச் 27 முதல் படப்பிடிப்பைத் தொடங்கத் திட்டமிட்டார்கள்.ஆனால்,சில காரணங்களால் நினைத்தபடி தொடங்கவில்லை.

ஏனெனில்,படப்பிடிப்பு மதுரை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடத்தவேண்டியிருக்கிறது.பல இடங்களில் வெளிப்புறப்படப்பிடிப்பும் இருக்கிறதாம்.மார்ச் மாதத்தில் தேர்தல் பரப்புரைகள் நடந்துகொண்டிருந்ததால் படப்பிடிப்புக்கு இடையூறு ஏற்படலாம் என்பதால், தேர்தல் முடிந்த பின்பு படப்பிடிப்பைத் தொடங்குவோம் என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

அதன்படி, ஏப்ரல் 27 ஆம் தேதி முதல் படப்பிடிப்பைத் தொடங்கத் திட்டமிட்டு வேலை செய்துகொண்டிருந்தார்கள்.

அதன்பின், சேயோன் படப்பிடிப்பு ஏப்ரல் 27 என்று இருந்ததில் மாற்றம் ஏற்பட்டது.ஆனால், அந்நாளில் முதலில் படப்பிடிப்புக் கருவிகளோடு சிலர் மட்டும் சென்று கள்ளழகர் ஆற்றில் இறங்குவது உள்ளிட்ட மக்கள் கூட்டம் சேருமிடங்கள் மற்றும் சில வெளிப்புறக் காட்சிகளைப் படமாக்கவிருக்கிறார்களாம்.

மே 15 ஆம் தேதி முதல் முழுமூச்சாகப் படப்பிடிப்பு தொடங்கும் என்று அப்போதிருந்து சிவகார்த்திகேயனும் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவிருக்கிறார் என்றும் சொல்லியிருந்தார்கள்.

முதலில் மார்ச் 27 முதல் படப்பிடிப்பு என்று சொன்னார்கள் அடுத்து ஏப்ரல் 27 என்றார்கள்.இப்போது அந்தத் தேதியிலும் இல்லாமல் மே 15 ஆம் தேதி படப்பிடிப்பு என்று சொல்லப்பட்டதால் அந்தப்படம் நின்றுவிட்டது என்கிற பேச்சு உலவியது.

அதைப் பொய்யாக்கும் வகையில், மே 6 ஆம் தேதி படக்குழு வெளியிட்ட அறிவிப்பில், நடிகை பாக்யஸ்ரீ போர்ஸின் பிறந்தநாள் எனும் இந்தச் சிறப்புமிக்க நன்னாளில் அவர் ‘சேயோன்’ திரைப்படத்தில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார் என்பதை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா நிறுவனங்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் அறிவிக்கின்றன என்று கூறியிருந்தார்கள்.

இதனால்,திட்டமிட்டபடி மே 15 ஆம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்குகிறதா? என்றால் இல்லை.

மே 15 ஆம் தேதி முதல் படப்பிடிப்புக்கான ஒத்திகை தொடங்குகிறது என்றும் அதில் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட அனைவரும் கலந்துகொள்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

மூன்றுநாட்களுக்குப் பிறகு,அதாவது மே 18 ஆம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்குகிறது என்கிறார்கள்.

Related Posts