சினிமா செய்திகள்

சூர்யாவின் கருப்பு இன்று காலை வெளியாகவில்லை ஏன்? – அதிரவைக்கும் தகவல்கள்

சூர்யா நடிப்பில், ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கருப்பு’ திரைப்படத்தில், திரிஷா,யோகிபாபு,
ஆர் ஜே பாலாஜி,இந்திரன்ஸ்,நட்டி நட்ராஜ்,சுவாசிகா,ஷிவதா,அனகா மாயா ரவி,சுப்ரீத் ரெட்டி,மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்திருக்கிறார்.

ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்தப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள்
எஸ்.ஆர்.பிரபு மற்றும் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இந்தப்படம் இன்று (மே 14,2026 ஆம் தேதி) முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதையொட்டி,காலை ஒன்பது மணி சிறப்புக்காட்சிக்கு அரசாங்கத்திடம் அனுமதி பெற்றிருந்தார்கள்.

ஆனால்,நேற்றிரவு பத்துமணியளவில் படத்தின் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி வெளியிட்ட பதிவில்,

அன்பான இரசிகர்களே, தற்போதைய நிலைமைக்கு என்னிடம் உறுதியான பதில் இல்லை.தயாரிப்பாளர்கள் தடைகளைச் சரிசெய்ய தங்களால் இயன்றவரை முயற்சி செய்து வருகிறார்கள்.இந்தப்படத்துக்கு எப்போதுமே தடைகள் இருந்திருக்கின்றன, ஆனால் எப்படியோ கடவுள் அதையெல்லாம் கடந்து வரச்செய்து, 32 மாதங்களுக்குப் பிறகு இதோ நாங்கள் இங்கே இருக்கிறோம்.இந்தமுறையும்,அவர் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது,முழுமையான நம்பிக்கை.
கருப்பன் எல்லாத் தடையும் அடிச்சு உடைப்பான்.கருப்பு நாளைக்கு காலைல செமயா ரிலீஸ் ஆகும்..!!! நம்பிக்கை வைங்க, நடக்கும்…!!!

என்று பதிவிட்டிருந்தார்.

நள்ளிரவு ஒருமணியளவில் படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, தவிர்க்க முடியாத காரணங்களால் கருப்பு திரைப்படத்தின் காலை 9 மணி காட்சிகள் இரத்து செய்யப்படுகின்றன. அனைவருக்கும் எங்களது மனமார்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்!

என்று பதிவிட்டிருந்தார்.

இதனால்,அறிவித்தபடி இன்று காலை படம் வெளியாகவில்லை.

ஏன்?

இந்தப்படத்துக்காக வாங்கியிருந்த கடன் அதற்கான வட்டி, இந்நிறுவனத்தின் இதற்கு முந்தைய படங்களுக்காகக் கொடுக்க வேண்டிய பாக்கிகள், இப்படத்தில் பணியாற்றியவர்களுக்குக் கடைசிநேரத்தில் கொடுக்க வேண்டிய தொகை ஆகிய எல்லாம் சேர்ந்து சுமார் 94 கோடி கொடுக்க வேண்டியிருந்ததாம்.

இவற்றில் மதுரை அன்பு, திருப்பூர் சுப்பிரமணியன், ஜஸ்வந்த் பண்டாரி ஆகியோருக்குக் கொடுக்க வேண்டிய கடன்கள் பெரும்பான்மையாக இருந்திருக்கிறது.

நேற்றிலிருந்து இவை ஒவ்வொன்றாகப் பேசி தீர்வை எட்டிவருகிறார்களாம்.

இன்று மதியம் 12 மணிக்கு படத்தைத் திரையிட்டுவிட வேண்டும் என்று தீவிரமாகப் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்றும் கடைசிநேரத்தில் நடிகர் சூர்யா பெரும்பொறுப்பை ஏற்றிருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.

இதனால் இன்று மதியமே படம் வெளியாகலாம் என்றும் நடைமுறைச் சிக்கல்கள் ஏதும் இருப்பின் நாளை வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.

Related Posts