உருவாகிறது தமிழ்நாடு திரைப்பட வர்த்தக சபை
தமிழகத்தில், திரைப்படத் தயாரிப்பில் ஈடுபட விரும்புகிறவர்கள், தயாரிப்பாளர்கள் சங்கம், ஃபிலிம் சேம்பர், கில்டு ஆகிய மூன்றில் ஏதாவதொரு அமைப்பில் உறுப்பினராக வேண்டும்.
இப்போது புதிதாக ஒரு அமைப்பைத் தொடங்கும் முயற்சி நடக்கிறதாம்.
மேலே சொன்ன மூன்று அமைப்புகளில் ஃபிலிம்சேம்பர் என்பது தென்னிந்தியா முழுமைக்குமானது.
அதில் தலைவராக வருகிறவர் தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலிருந்து சுழற்சி அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படவேண்டும்.
தென்னிந்தியா முழுமைக்குமான இந்த அமைப்பு இருக்கும்போதே, ஆந்திராவில் தனியாக ஆந்திர திரைப்பட வர்த்தக சபை என்றும் கேரளாவில் கேரள திரைப்பட வர்த்தக சபை என்றும் கர்நாடகாவில கன்னட திரைப்பட வர்த்தக சபை என்றும் தனித்தனி அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.
ஆனால் தமிழகத்தில் மட்டும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை மட்டும் இருக்கிறது.
இப்போது தமிழகத்திலும் புதிதாக தமிழ்நாடு திரைப்பட வர்த்தக சபை எனும் அமைப்பை உருவாக்கும் முயற்சி நடக்கிறதாம்.
கேயார், கலைப்புலிதாணு உள்ளிட்டோர் இதில் முன்னின்று பணியாற்றுவதாகச் சொல்லப்படுகிறது.
இதுதொடர்பான ஆலோசனைகள் நடந்து கொண்டிருக்கிறதாம். விரைவில் இதுபற்றிய அறிவிப்பு வெளியாகலாம் என்று சொல்லப்படுகிறது.
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்குத் தேர்தல் அறிவிக்கப்பட்டு இப்போது தள்ளிவைக்கப்பட்டிருக்கும் இந்தச் சூழலில் புதிய அமைப்புக்கான ஆலோசனை நடந்துவருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.











