சினிமா செய்திகள்

பொன்னியின் செல்வன் வேலைகள் தொடங்காதது ஏன்?

மணிரத்னம் இயக்கத்தில் தயாராகும் பொன்னியின்செல்வன் படப்பிடிப்பு கொரொனாவால் தடைபட்டிருக்கிறது.

இந்நிலையில், மே 11 ஆம் தேதி முதல் படப்பிடிப்புக்குப் பின்னான வேலைகளைத் தொடங்கலாம் என்று தமிழக அரசு அனுமதியளித்தது.

அதையொட்டி பணிகள் தொடங்கும் படக்குழுவினர் தொழிலாளர் சம்மேளனத்தில் கடிதம் கொடுக்கவேண்டும் என்று ஆர்.கே.செல்வமணி கூறியிருந்தார்.

அதன்படி முதல்நாளிலேயே ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் இந்தியன் 2, விஜய் நடிக்கும் மாஸ்டர் உட்பட பல படங்களின் படத்தொகுப்பு மற்றும் குரல்பதிவு உள்ளிட்ட பணிகள் தொடங்கியிருக்கின்றன.இது ஃபெப்சி வெளியிட்ட செய்திக்குறிப்பின் மூலம் தெரியவந்தது.

ஆனால் அதில், பொன்னியின் செல்வன் படத்தின் பணிகள் தொடங்கியதாக எந்தச் செய்தியுமில்லை. 

இதுவரை எடுத்த காட்சிகளைத் தொகுக்கும் வேலைகளாவது நடந்தாகவேண்டுமே? என்னவாயிற்று? என்று கேட்டால், அப்படத்தின் வேலைகளும் நடக்கின்றவாம். சென்னையில் அல்ல மும்பையில்.

மும்பையிலுள்ள ஒரு நிறுவனத்தில் அப்படத்தின் பணிகள் நடந்துகொண்டிருக்கின்றனவாம், காணொலி மூலம் மணிரத்னம் அவர்களுடன் உரையாடிக்கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.

அதேநேரத்தில் அடுத்தகட்டப் படப்பிடிப்புக்கான திட்டமிடலும் தொடங்கியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
 

Related Posts