விடாமுயற்சி குட்பேட்அக்லி அடுத்து அஜீத் நடிக்கும் புதிய படம்?

நடிகர் அஜீத் இப்போது, விடாமுயற்சி. குட் பேட் அக்லி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் விடா முயற்சி படத்தை மகிழ்திருமேனி இயக்குகிறார்.இப்படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் அர்ஜுன், ரெஜினா கெஸாண்ட்ரா, ஆரவ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து அதற்குப் பிறகான வேலைகள் வேகமாக நடந்து வருகின்றன.
விடா முயற்சி படத்துக்கு அடுத்து அஜித் நடிக்கும் படம் குட் பேட் அக்லி.ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் இப்படத்தை தெலுங்கின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது.இப்படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.
இப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் போதே, 2025 ஆம் ஆண்டு பொங்கல் நாளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால், விடா முயற்சி படம் திட்டமிட்டபடி வெளியாகவியலாத சூழல் இருக்கிறது. இதனால் விடா முயற்சி எப்போது வரும்? என்று தெரியவில்லை. இதனால் விடா முயற்சி முதலில் வெளியாகுமா? அல்லது குட் பேட் அக்லி படத்துக்குப் பிறகு வெளியாகுமா? என்று பட்டிமன்றமே நடந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில், இவ்விரு படங்களுக்கு அடுத்து அஜீத்தை ஒரு புதிய படத்தில் நடிக்க வைப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடங்கியிருக்கின்றனவாம்.
அண்மையில் பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற தங்கலான் படத்தையும் அக்டோபர் 10 அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிற சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள கங்குவா படத்தையும் தயாரித்திருந்தது ஸ்டுடியோகிரின் நிறுவனம்.
இந்நிறுவனத்தின் தயாரிப்பில் ஒரு படம் நடிக்க வேண்டும் என்று கேட்டு அஜீத்தை அணுகியிருக்கிறார்களாம்.அது தொடர்பான பேச்சுகள் நடக்கிறதாம். அப்படத்தை சிறுத்தை சிவாவே இயக்குவார் என்றும் சொல்கிறார்கள்.
ஏற்கெனவே சிறுத்தை சிவா இயக்கத்தில் வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் ஆகிய படங்களில் அஜீத் நடித்திருப்பதால் அவருடைய இயக்கத்தில் நடிக்க அஜீத் சம்மதம் சொல்லி விடுவார் என்று நம்பிக்கையுடன் சொல்கிறார்கள்.
சம்பளப் பேச்சுவார்த்தை மட்டும் சுமுகமாக முடிந்துவிட்டால் விரைவில் அஜீத் நடிக்கும் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிவிடும் என்று நம்பிக்கையாகச் சொல்கிறார்கள்.
நல்லதே நடக்கட்டும்.