கிச்சா 47 படத்திலிருந்து விலகினார் சேரன் – காரணம் என்ன?
இயக்குநர் சேரன் 2019 ஆம் ஆண்டு வெளியான திருமணம் படத்தை இயக்கியிருந்தார்.அவரே நடித்தும் இருந்த இப்படத்தில் தம்பிராமையா, சுகன்யா, எம்எஸ் பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
அதன்பின்,ஜர்னி என்ற பெயரில் ஓர் இணையத் தொடரை இயக்கினார் சேரன்.இவ்வாண்டு தொடக்கத்தில் சோனி லிவ் இணையதளத்தில் அத்தொடர் வெளியானது.
இவற்றுக்கிடையில் ஆனந்தம் விளையாடும் வீடு படத்தில் நடித்திருந்தார்.
2023 செப்டம்பர் மாதம் இரண்டாம் தேதி கன்னட நடிகர் சுதீப் கிச்சா பிறந்தநாள்.அதையொட்டி சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தது.
அதில்,சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் சேரன் ஒரு படம் இயக்குகிறார்.அப்படத்தில் கிச்சா சுதீப் நாயகனாக நடிக்கவிருக்கிறார் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.அப்படத்தை கிச்சா 47 என்று சொல்லியிருந்தனர்.
அதையொட்டி இயக்குநர் சேரன் வெளியிட்டிருந்த பதிவில், ஆட்டோகிராப் போன்ற ஒரு மறக்க முடியாத பரிசை வழங்கக் காத்திருக்கிறேன் எனக் கூறியிருந்தார்.
ஏற்கெனவே, 2006 ஆம் ஆண்டு சேரன் இயக்கி நடித்த ‘ஆட்டோகிராஃப்’ படத்தை ‘மை ஆட்டோகிராப்’ என்ற தலைப்பில் கன்னடத்தில் சுதீப் இயக்கி நடித்திருந்தார்.
அப்போதிருந்தே நல்லுறவில் இருந்த சேரனும் கிச்சா சுதீப்பும் இணைந்து இப்படம் செய்வதாக இருந்தது.அது தள்ளித் தள்ளிப் போய் கடந்த ஆண்டு அறிவிப்பு வந்தது.
ஆனால்,படம் குறித்த அறிவிப்பு வெளியாகி ஒரு வருடம் நிறைவடைந்துவிட்டது.அறிவிப்புக்குப் பிறகு இப்படம் குறித்து எந்தத் தகவலும் இல்லை.
இப்போது, சேரன் இயக்கத்தில் கிச்சா சுதீப் நடிக்கவிருந்த படம் கைவிடப்பட்டுவிட்டது என்கிறார்கள்.
அதற்குக் காரணம்?
கதை திரைக்கதை ஆகியனவற்றில் சேரனுக்கும் கிச்சா சுதீப்புக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுவிட்டதாம். திரைக்கதை உருவாக்கத்தில் கிச்சா சுதீப்பின் தலையீடு அதிகமாக இருந்ததென்று சொல்லப்படுகிறது.தொடக்கத்தில் பேசிப் பேசிச் சமாளித்து வந்திருக்கிறார் சேரன்.ஒரு கட்டத்தில் அவருடைய தலையீடு அதிகமாகவே மிகவும் கோபமடைந்துவிட்டாராம்.
அதனால்,சத்யஜோதி நிறுவனத்திடம் இப்படத்தை இயக்குவதிலிருந்து நான் விலகிக் கொள்கிறேன் என்று உறுதியாகச் சொல்லிவிட்டாராம்.
சேரன் விலகிவிட்டாலும் கிச்சா சுதீப்பை வைத்துப் படம் தயாரிக்கும் முயற்சியிலிருந்து சத்யஜோதி நிறுவனம் பின்வாங்கவில்லை என்கிறார்கள்.
கிச்சா சுதீப்புக்கு இணக்கமான ஓர் இயக்குநரை வைத்து படத்தைத் தயாரிக்கும் முயற்சியில் அந்நிறுவனம் இருக்கிறதென்கிறார்கள்.இப்போது இரண்டுக்கும் மேற்பட்ட இயக்குநர்கள் கிச்சா சுதீப்பிடம் கதை சொல்லியிருக்கிறார்கள் என்றும் அவர் தேர்வு செய்யும் கதை மற்றும் இயக்குநரை வைத்து படம் எடுப்பார்கள் என்றும் சொல்லப்படுகிறது.