தி கோட் நிகழ்ச்சி தள்ளிப்போனது ஏன்? – புதிய தகவல்
வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய், பிரசாந்த், பிரபு தேவா, சினேகா, மீனாட்சி செளத்ரி, மோகன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம் தி கோட் எனச் சுருக்கமாகச் சொல்லப்படும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்.
யுவன்சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.சித்தார்த் நுனி ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படம் செப்டம்பர் 5 அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் இப்படக்குழுவினரின் செய்தியாளர் சந்திப்பு இன்று நடப்பதாக இருந்தது.நேற்றிரவு அந்நிகழ்வு தள்ளி வைக்கப்பட்டிருப்பதாக அறிவித்தனர்.
அதற்கு என்ன காரணம்?
இதுவரை இப்படத்தின் மூன்று பாடல்கள் வெளியாகியுள்ளன.இப்படத்துக்குப் பாடல் வெளியீட்டு விழா இல்லையென்றாகிவிட்டதால் நான்காவது பாடலை வெளியிடத் திட்டமிட்டிருந்தார்கள். இன்று அப்பாடலை வெளியிடுவதாகத் திட்டமிட்டிருந்தார்களாம்.
ஆனால்,அப்பாடல் காணொலி வேலைகள் உள்ளிட்டு சில வேலைகள் நிறைவு பெறவில்லை அதனால் நிகழ்ச்சியை ஓரிரு நாட்கள் தள்ளிவையுங்கள் என்று இயக்குநர் வெங்கட்பிரபு கேட்டுக் கொண்டதன் பேரில் நிகழ்ச்சி தள்ளிவைக்கப்பட்டது என்று சொல்லப்படுகிறது.
இதற்கிடையே, விரைவில் வெளியாகவிருக்கும் அந்த நான்காவது பாடலில் விஜய் மற்றும் த்ரிஷா ஆகியோர் நடனமாடியிருப்பதாகவும்,இதுவரை வெளியான பாடல்களைப் போலில்லாமல் வெளியானவுடனே மிகப் பெரிய வரவேற்பைப் பெறக்கூடிய வகையிலான துள்ளல் பாடலாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
இப்பாடலை யுவன் ஷங்கர் ராஜாவின் பிறந்த நாளான ஆகஸ்ட் 31 ஆம் தேதி வெளியிடலாம் என்று இயக்குநர் குழு திட்டமிட்டிருந்ததாம்.அதை அறியாத தயாரிப்பு நிறுவனம் இன்றைக்கு செய்தியாளர் சந்திப்பை ஏற்பாடு செய்து விஜய் தவிர படத்தில் இடம்பெறும் அனைத்து நடிகர் நடிகையரையும் வரவழைக்கத் திட்டமிட்டுப் பணியாற்றி வந்திருக்கின்றனர்.
இவ்வளவு வேலைகளை தயாரிப்பு நிறுவனம் செய்திருக்கும் நேரத்தில் யுவனின் பிறந்த நாளை முன்னிட்டு நிகழ்ச்சியைத் தள்ளி வையுங்கள் என்றால் நன்றாக இருக்காது என்பதால் வேலைகள் முடியவில்லை அதனால் நிகழ்ச்சியைத் தள்ளி வையுங்கள் என்று இயக்குநர் தரப்பில் சொல்லப்பட்டிருக்கிறது.
அதை ஏற்று நிகழ்ச்சியைத் தயாரிப்பு நிறுவனம் தள்ளிவைத்துள்ளது.
மீண்டும் படக்குழுவினர் மொத்தமும் கலந்து கொள்ளும் வகையில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி நிகழ்ச்சி நடக்கும் என்றும் அப்போது படத்தின் நான்காவது பாடல் வெளியாகும் என்றும் அப்போது முதல் படத்தின் மீதான எதிர்பார்ப்பு பன்மடங்கு உயரும் என்றும் இயக்குநர் குழு தயாரிப்புத் தரப்பு ஆகியோர் மிகுந்த நம்பிக்கையுடன் சொல்கின்றனர்.