சினிமா செய்திகள்

விஷால் அணியில் கமீலா நாசரா? – உண்மை என்ன?

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படுகிறது. 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த தேர்தலில் விஷால் தலைவரானார்.அவர் செயல்களில் அதிருப்தி அடைந்த எதிரணியினர் சங்க அலுவலகத்தைப் பூட்டிப் போராட்டம் நடத்தினர். அதனால் தமிழக அரசு, தயாரிப்பாளர்கள் சங்கத்துக்குத் தனி அதிகாரியையும், பாரதிராஜா தலைமையில் 8 பேர் கொண்ட ஆலோசனைக் குழுவையும் நியமித்தது.

இவ்வாண்டு ஜூன் 30 ஆம் தேதிக்குள் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்குத் தேர்தலை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் அதிகாரியாக ஓய்வு பெற்ற நீதிபதி ஜெயச்சந்திரன் நியமிக்கப்பட்டு உள்ளார். இவர் வருகிற 7 ஆம் தேதி பொறுப்பு ஏற்கிறார். மே மாதம் இறுதியில் அல்லது ஜூன் முதல் வாரத்தில் தேர்தல் நடைபெறும் என்று தெரிகிறது.

இத்தேர்தலில் இயக்குநர் பாரதிராஜாவை தலைவர் பதவிக்கு நிறுத்த முயற்சி நடக்கிறது எனவும் அவர் மறுத்தால் டி.ஜி.தியாகராஜன் போட்டியிடுவார் என்றும் கூறப்படுகிறது.

இன்னொரு பக்கம், விஷால் அணி மீண்டும் களம் இறங்குகிறது என்றும் அவரது அணி சார்பில் கமீலா நாசரை தலைவர் பதவிக்கு நிறுத்துகிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது. 3 ஆவது அணி சார்பில் இராம நாராயணன் மகன் முரளி என்கிற ராமசாமி தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறார் என்றும் சொல்லப்படுகிறது.

விஷால் அணியில் கமீலாநாசர் போட்டியிடுவது உறுதியா? என்று விசாரித்தால், அப்படி இல்லையாம்.அப்படி வந்த செய்திக்கும் அவருக்கும் சம்பந்தமே இல்லை.

இது தொடர்பாக கமீலா நாசர் வெளியிட்டுள்ள பதிவில்…

இன்று தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருப்பதை நன்கு அறிவேன்.அதற்காகக் கவலையும் அக்கறையும் கொள்கிறேன். இந்நிலைக்குத் தள்ளியவரோடு கரம் கோர்க்கவில்லை.எந்த அணியோடும் இப்போதுவரை இல்லை. சங்கத்தின் மேன்மைக்காக உழைப்பவரோடுமட்டுமே என் கை இணையும்

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Posts