சினிமா செய்திகள்

துருவநட்சத்திரம் திட்டமிட்டபடி வெளியாகுமா?

விக்ரம், ரிதுவர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் படம் `துருவ நட்சத்திரம்’.இந்தப்படத்தில் இவர்களுடன் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன், சுரேஷ் மேனன், வம்சி கிருஷ்ணா, சலீம் பெய்க், சதீஷ் கிருஷ்ணன், முன்னா சிமோன், மாயா எஸ்.கிருஷ்ணன், ஷ்ரவந்தி சாய்நாத், திவ்யதர்ஷினி உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள்.

கவுதம்மேனன் எழுதி இயக்குகிறார்.

இப்படம் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. பல்வேறு சிக்கல்களால் தாமதமாகிவந்தது.

இப்போது படத்தின் வேலைகள் வேகமடைந்திருக்கின்றனவாம்.

மே 19 ஆம் தேதி படத்தை வெளியிடத் திட்டமிட்டு வேலைகள் செய்துகொண்டிருக்கிறார்கள்.

குரல்பதிவு மற்றும் படத்தொகுப்பு வேலைகள் நிறைவடைந்து பின்னணி இசைச் சேர்ப்புக்காக ஹாரிஸ்ஜெயராஜிடம் மொத்தப்படத்தையும் கொடுத்துவிட்டார்களாம்.

அவரும் தீவிரமாகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறாராம்.

இதற்கிடையே இப்படம் தொடர்பாக வாங்கிய கடன்கள், கொடுக்க வேண்டிய பாக்கிகள் ஆகியனவற்றைக் கணக்கிட்டு அவற்றை எப்படிக் கொடுப்பது? என்கிற திட்டமும் தீட்டப்பட்டுவருகிறதாம்.

ஒரு பெரிய தயாரிப்பு நிறுவனத்திடம் வாங்கிய பதினைந்துகோடி ரொக்கம் அதற்கான குறைந்தபட்ச வட்டி மற்றும் விநியோகஸ்தர் கூட்டமைப்புக்குக் கட்டுவதாக ஒப்புக்கொண்ட தொகை ஆகியன பெரிய சிக்கலாக இருக்கிறதென்று சொல்லப்படுகிறது.

அதற்கும் இயக்குநர் கவுதம்மேனன் ஒரு தீர்வைச் சொல்லியிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. அந்தப் பெரிய நிறுவனம் அதை ஒப்புக்கொண்டால் திட்டமிட்டபடி படம் வெளியாகிவிடும் என்கிறார்கள்.

இயக்குநர் வேலையையே மறந்துவிட்டு ஏராளமான படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் கவுதம் மேனனுக்கு இந்தப்படம் வெளியாகி வெற்றி பெற்றால்தான் மீண்டும் இயக்குநராக வேலை செய்யவியலும் எனும் நிலை. அதனால் எப்பாடுபட்டாவது இப்படத்தை வெற்றிப் படமாக்கிவிட வேண்டும் என்று அவர் தீவிரமாக உழைத்துக் கொண்டிருக்கிறாராம்.

பல வருடங்களாக இந்தப்படம் கிடப்பில் கிடந்து இப்போது உயிர்பெற்றிருக்கிறது.அதனால், இப்படத்தில் சம்பந்தப்பட்ட எல்லோருமே இது நல்லபடியாக வெளியானால் சரி என்கிற எண்ணத்தில் இருக்கிறார்கள். எனவே, இம்முறை தவறாமல் படம் வெளியாகிவிடும் என்று சொல்கிறார்கள்.

Related Posts