ரெட்ஜெயண்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யும் மணிரத்னம் – விவரம்
மணிரத்னம் இயக்கும் படம் இஞ்சி வெல்லம்.இப்படத்தில் விஜய்சேதுபதி கதாநாயகனாக நடிக்கிறார்.நாயகியாக சாய்பல்லவி நடிக்கிறார்.
இந்தப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.வங்காளத்தில் புகழ்பெற்ற அவிக் முகோபாத்யா இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை 23 ஆம் தேதி தொடங்கியது.முதல்கட்டப் படப்பிடிப்பு கொல்கத்தாவில் தொடங்கியது.அங்கு ஜூலை இறுதிவரை படப்பிடிப்பு நடந்திருக்கிறது.அதன்பின்,சென்னை புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடந்தது.
தலைப்பிடப்படாமல் இருந்த இந்தப்படத்துக்கு ‘இஞ்சி வெல்லம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.செப்டம்பர் 7 அன்று இந்தப்பெயர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமே இந்தப்படத்தைத் தயாரிக்கிறது.லைகா புரொடக்சன்ஸ் நிறுவனமும் இப்படத்தின் தயாரிப்பில் இருப்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது.இருந்தாலும்,படத்தயாரிப்பு,வியாபாரம்,விநியோகம் ஆகிய எல்லா வேலைகளையும் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமே செய்கிறதாம்.
இப்படத்தின் வேலைகள் வேகமாக நடந்து கொண்டிருக்கிறது என்கிறார்கள்.
இப்படத்தை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பொங்கல் திருநாளில் வெளியிடத் திட்டமிட்டு வேலைகள் செய்து கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
பொங்கலுக்கு வருமென்று எதிர்பார்க்கப்பட்ட ரஜினியின் தர்மன் திரைப்படம் தள்ளிப்போகும் என்பதால் இப்படத்தை பொங்கல் விடுமுறையில் வெளியிட்டுவிடலாம் என்பது மணிரத்னத்தின் கணக்கு என்கிறார்கள்.
படத்தின் விநியோகத்தையும் அவரே பார்த்துக்கொள்கிறார் என்பதும் படத்தின் தமிழ்நாடு திரையரங்கு வெளியீடு தொடர்பாக அவர் எடுத்துள்ள முடிவு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அப்படி அவர் எடுத்த முடிவு என்ன>
இஞ்சி வெல்லம் படத்தின் தமிழ்நாடு திரையரங்க வெளியீட்டு உரிமையை ரெட்ஜெயண்ட் நிறுவனத்திடம் கொடுக்க முடிவ்ய் செய்து அவர்களை அணுகியதாகச் சொல்லப்படுகிறது.அவர்களும் அதை ஒப்புக்கொண்டதோடு,மற்ற படங்களைக் காட்டிலும் கூடுதல் முன்பணம் கொடுக்க ஒப்புக்கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
இதுதொடர்பான பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்துவிட்டன என்றும் விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்றும் அதன்பின் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என்றும் சொல்கிறார்கள்.
மணிரத்னமே நேரிடையாக ரெட்ஜெயண்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டிருப்பது பேசுபொருளாகியிருக்கிறது.ஏனெனில்,
தமிழ்நாட்டில் ஆட்சிமாற்றம் ஏற்பட்ட பிறகு ரெட்ஜெயண்ட் நிறுவனம்,முற்றாக ஒதுக்கப்படவேண்டுமென்று ஆளுங்கட்சியினர் வெளிப்படையாகவே பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
அதைத்தாண்டி பல்வேறு படங்கள்,அந்நிறுவனத்தின் வெளியிட்டில் வந்து கொண்டுதானிருக்கிறது.மேலும் பல படங்களை வெளியிட்டுத் தரும்படி அந்நிறுவனத்திடம் கோரிக்கை வைக்கப்படுகிறது என்றும் சொல்லப்படுகிறது.இந்நேரத்தில் அந்நிறுவனத்துக்குத் தன் படத்தை மணிரத்னம் கொடுத்திருக்கிறார் என்பது கவனித்தக்கதாக மாறியிருக்கிறது.











