September 24, 2026
விமர்சனம்

சஞ்ஜீவன் – திரைப்பட விமர்சனம்

ஸ்னூக்கர் என்னும் மேடைக் கோல் பந்து விளையாட்டை கதைக்களமாகக் கொண்டு வந்திருக்கும் முதல் திரைப்படம் சஞ்ஜீவன்.

புதுமுக நடிகர் வினோத் லோகிதாஸ் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். ஸ்னூக்கர் விளையாட்டை இரசித்து விளையாடும் காட்சிகள்,காதல் காட்சிகள், நண்பர்களோடு இருக்கும் காட்சிகள் ஆகிய எல்லாவற்றிலும் தேர்ச்சி பெற்றிருக்கிறார்.

நாயகனின் நண்பர்களாக வரும், சிவ் நிஷாந்த், விமல் ராஜா, சத்யா என்.ஜே, ஆகியோரும் அவரவர் பங்கை நன்றாகச் செய்து படம் கலகலப்பாக நகர உதவியிருக்கிறார்கள்.

நாயகியாக திவ்யாதுரைசாமி நடித்திருக்கிறார். அமைதியான அழகுடன் நற்பண்புகளும் கலந்திருக்கும் கதாபாத்திரம். அதற்கு நூறுவிழுக்காடு பொருத்தமாகத் தோன்றி ஈர்க்கிறார்.

கார்த்திக் ஸ்வர்ணகுமார் (நடிகர் பிரசன்னாவின் தம்பி) ஒளிப்பதிவில் ஸ்னூக்கர் விளையாட்டு விளக்கமாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. கதைக்களத்துக்குத் தேவையான வண்ணங்களின் பயன்பாடு இரசிக்க வைக்கிறது.நாயகி திவ்யாதுரைசாமி சேலையில் வரும் காட்சி சிறப்பு.ஏற்காடு மலைப்பாதையில் நடக்கும் மகிழுந்து துரத்தல் காட்சி படபடப்பு.

தனுஜ்மேனனின் இசையில் பாடல்கள் நன்று. இறுதிப்பாடல் உருக்கம்.

சிபுநீலின் படத்தொகுப்பு அளவு. 

எழுதி இயக்கியிருக்கிறார் மணிசேகர். முதல்பாதியில் ஸ்னூக்கர் விளையாட்டைப் படபடப்புடன் பார்க்க வைக்கிறார். வகைக்கொரு இளைஞரை முன்மாதிரியாக வைத்து வடிவமைக்கப்பட்டிருக்கும் பாத்திரங்கள் படத்தை இரசித்துப் பார்க்க வைக்கிறது.எங்கேயும் எப்போதும் படத்தை நினைவுபடுத்தும் இறுதித் திருப்பம் திரைக்கதைக்குப் பலம். ஆனால் மனம் ஒப்பவில்லை.

சஞ்ஜீவன் என்றால் அழிவற்றவன் என்று பொருளாம். 

விளையாட்டு வினையாகும் என்ற சொல்லுக்கு எடுத்துகாட்டாகவும் விபத்துகளுக்கு நல்லவர் கெட்டவர் தெரியாது என்பதையும் சொல்லி அதிர வைத்திருக்கும் இப்படமும் அழிவற்றிருக்கும்.

Related Posts