விமர்சனம்

சிந்துபாத் – திரைப்பட விமர்சனம்

தென்காசியில் திருடுவதைத் தொழிலாகக் கொண்ட விஜய்சேதுபதி, நிஜத்தில் அவர் மகனும் கதையில் அவருடைய நண்பருமான சூர்யா விஜயசேதுபதி அவருடைய கூட்டாளி.

ஒரு கட்டத்தில் நாயகி அஞ்சலியைப் பார்த்தவுடன் காதல் கொள்கிறார் விஜயசேதுபதி. முதலில் மோதல் பிறகு காதல். அதன்பின் அதிரடிக் கல்யாணம்.

இவற்றிற்குப் பின், தாய்லாந்தில் கொத்தடிமையாகச் சிக்கிக் கொண்ட மனைவி அஞ்சலியைக் காப்பாற்றி மீட்டுவர தென்காசியிலிருந்து கிளம்பிச் செல்கிறார் விஜய்சேதுபதி.கூடவே சூர்யா விஜயசேதுபதியும் செல்கிறார்.
போன இடத்தில் என்னவெல்லாம் நடக்கிறது? என்பதுதான் படம்.

விஜய்சேதுபதி வழக்கம் போல நன்றாக நடித்திருக்கிறார். அஞ்சலியிடம் அவர் விடும் ரொமாண்டிக் பார்வை இந்தப்படத்தில் விஜய்சேதுபதியின் சிறப்பு. சண்டைக் காட்சிகளிலும் தேர்ந்திருக்கிறார்.

தாய் எட்டடி என்றால் குட்டி பதினாறடி பழமொழிக்குப் பொருத்தமாக இருக்கிறார் விஜய்சேதுபதியின் மகன். எல்லாக்காட்சிகளையும் அலட்சியமாகக் கடந்திருக்கிறார். விஜய்சேதுபதி தன்னை விட்டுவிட்டு தாய்லாந்து செல்லப்போகிறார் என்கிற இடத்தில், பார்வையிலேயே தன் தவிப்பை வெளிப்படுத்தி சபாஷ் பெறுகிறார் சூர்யா.

நீண்ட நாட்களுக்குப் பிறகு அஞ்சலி. தோற்றத்தில் பெரும் மாற்றம். ஆனால் நடிப்பில் குறையில்லை.

வில்லனாக நடித்திருக்கும் லிங்கா நல்ல தேர்வு. ஜார்ஜ், விவேக் பிரசன்னா ஆகியோர் கவனிக்க வைக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் கண்ணன் பணி மிகச்சிறப்பு. தென்காசியின் அழகையும் தாய்லாந்தின் அழகையும் விரித்துக் காட்டியிருக்கிறார்.

யுவனின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையும் நன்று.

இயக்குநர் எஸ்.யு.அருண்குமார், கதாபாத்திரத்துக்கான நடிகர்கள் தேர்வு, காதுமந்தமான விஜய்சேதுபதி சத்தமாகப் பேசுகிற அஞ்சலி, நாயகனின் நண்பன் வேடத்துக்கு ஈடுகொடுக்கும் சூர்யா ஆகிய பாத்திரப் படைப்புகளில் முதல்பாதியை சுவையாக்கிவிட்டார்.

தாய்லாந்தில் அவ்வளவு பெரிய தாதாவை மிக எளிதாக எதிர்கொள்வது உட்பட பல காட்சிகள் நம்பும்படியாக இல்லை.

பாலியல்தொழிலாளியின் கருணை, ஒண்டிவில்லில் எதிரிகளை அடிக்கும் உத்தி, மற்றவர்களுக்காகத் தன் கழுத்தை அறுத்துக் கொள்ளும் பெண் போன்ற சில விசயங்கள் இரண்டாம் பாதியைக் காப்பாற்றுகின்றன.

Related Posts