விமர்சனம்

கோடியில் ஒருவன் – திரைப்பட விமர்சனம்

தேனி மாவட்டம் கம்பத்துக்குப் பக்கத்திலுள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் விஜய் ஆண்டனிக்கு,அம்மாவின் கட்டளையை ஏற்று  ஐஏஎஸ் படித்து ஆட்சியர் ஆகி மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்பது இலட்சியம்.

அதற்காகச் சென்னை வருகிறார். வருகிற இடத்தில் அவருக்கு உள்ளூர் ரவுடி முதல் ஆளும்கட்சி அரசியல்வாதிகள் வரை பல சிக்கல்கள். அவற்றைக் கடந்து ஐஏஎஸ் ஆனாரா? இல்லையா? என்கிற கேள்விக்கு விடை சொல்கிறது கோடியில் ஒருவன்.

மக்கள் சேவை செய்யும் நாயகன் என்று கதை அமைந்துவிட்டதால், பாடல் காட்சிகளிலிருந்து எல்லாவற்றிலும் யாருக்காவது உதவி செய்துகொண்டேயிருக்கிறார் விஜய் ஆண்டனி.

சென்னையின் அரசாங்கக் குடியிருப்புகளில் ஒன்றில் தங்கும் அவர் அந்தப்பகுதியைச் சுத்தப்படுத்த எடுக்கும் சிரத்தையும் அது கொடுக்கும் வெற்றியும் எல்லோரும் கடைபிடிக்க வேண்டியது.

சூழலுக்கேற்ப அவர் எடுக்கும் முடிவுகளும் அடையும் உயரங்களும் வரவேற்கத்தக்கவை.

நாயகியாக ஆத்மிகா. நாயகனுக்கு உதவியாக வரும் வேடம். பாடல்காட்சிகளில் பரவசம் காட்டிவிட்டு கடைசிவரை விஜய் ஆண்டனியோடு வந்து போகிறார்.

விஜய் ஆண்டனியின் அம்மாவாக நடித்திருக்கும் திவ்யபிரபா கவனிக்க வைக்கிறார். அவர் செத்துப் பிழைக்கும் காட்சி சிலிர்ப்பு.

படத்தில்,கருடா ராம், சூப்பர் சுப்பராயன் உட்பட நிறைய வில்லன்கள். நிறையப் படங்களில் பொறுப்பான அப்பாவாகவும் புனிதராகவும் மட்டுமே பார்த்த பூ இராமுவை வில்லனாக்கியிருக்கிறார்கள். அதிலும் நன்றாகப் பொருந்தியிருக்கிறார்.

நிவாஸ் கே பிரசன்னாவின் இசையில் பாடல்கள் கதைக்கேற்ப அமைந்துள்ளன.பின்னணி இசையும் குறைவில்லை.

ஒளிப்பதிவாளர் என்.எஸ்.உதயகுமார்,  அசுத்தமான இடங்களை அடிக்கடி காட்டியிருப்பதற்கான காரணம் பின்னர் தெரிகிறது. பறவைப்பார்வையில் சென்னையின் நெருக்கமான குடியிருப்புகளும் அழகாகத் தெரிகின்றன.

ஒரு சிறு கிராமத்தில் பிறந்த சாமானியன் ஒருவன் ஏழு கோடியில் ஒருவன் ஆகிறார். அதற்கு அவனுடைய சிந்தனை எப்போதுமே நேர்மறையாக இருப்பது மட்டுமே காரணம்.

இந்த அடிப்படையை வைத்துக்கொண்டு அம்மா பாசம், ஹீரோயிசம் ஆகியனவற்றைச் சரிவிகிதத்தில் கலந்து திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குநர் ஆனந்தகிருஷ்ணன். வேகம், விவேகம் ஆகியன மாறி மாறி வருவது பலவீனம்.

மக்கள் சேவைத் திட்டங்கள் பற்றிய வரவு செலவுக் கணக்குகளை அந்தந்தப் பகுதி மக்களுக்குத் தெரிவிக்கவேண்டும் என்கிற கருத்து வரவேற்க வேண்டிய கருத்து.

விஜய் ஆண்டனியின் நாயக பிம்பத்தை உயர்த்த முயலும் படம்.

Related Posts